தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’தொடர்பான விடயங்கள் அண்மைய நாட்களில் பேசுபொருளாகியுள்ளது.
“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.
வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.
விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்தது.
அதற்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட பல விடயங்கள் உலகளாவிய ரீதியில் றீச்ஷா தொடர்பாகவும் அதன் தலைவர் பாஸ்கரன் கந்தையா தொடர்பாகவும் விடயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.
உணவுத்திருவிழா இடைநித்தப்பட்டதும் அந்தப் பிரதேசத்தில் றீச்ஷா பணியாளர்கள் எதிர்கொண்ட அசெகரியங்கள் குறித்தும் றீச்ஷாவின் தலைவர் வீடியோக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு தனக்காகவும் தனது உறவுகளான றீச்ஷா பணியாளர்களுக்கும் ஆகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அவர் தனது கருத்தை பின்வருமாறு பகிர்ந்துள்ளார்…
‘உங்கள் வலிமையானதும் மனதைத் தொட்டதுமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவையும், குறிப்பாக இந்த விடயத்தின் பின்னால் இருக்கும் பெரிய நோக்கத்தைப் புரிந்துகொண்டதையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
எப்போதும் நான் நம்புவது ஒன்றுதான் — ஒருவரின் வெற்றி நமது மக்களுக்கு மேலும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; நம்மை பிரிக்கக்கூடாது. யாருடனும் போட்டியிடுவதோ, யாருடைய வாய்ப்பையும் பறிப்பதோ எனது நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை. நமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமூகத்திற்கு பயனுள்ள ஒன்றை உருவாக்கி, எமது மண்ணின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வதே எனது நோக்கம்.
எந்தவொரு பயணத்திலும் விமர்சனங்கள் இருப்பது இயல்புதான். நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான விமர்சனங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு சமூகமாக நாம் ஒருவரை ஒருவர் கீழே இழுப்பதைவிட, ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது உண்மையான விருப்பம்.
நாம் அனைவரும் வெற்றி பெறுவதற்கு போதுமான இடமும் வாய்ப்புகளும் உள்ளன. ஒருவரின் வெற்றி இன்னொருவருக்கு பொறாமைக்கான காரணமாக இல்லாமல், முன்னேறுவதற்கான உத்வேகமாக இருக்க வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்றதற்காக மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு மேலும் வலிமையையும், தொடர்ந்து முன்னேறி இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையையும் தருகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.