மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
புதிய எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய அவர் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்பட்டாலும் தேசிய எரிசக்தி கொள்கைகள் நீண்டகால இலக்குகளுடன் சீராக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு வசதி செய்யும் வகையில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் ஏப்ரல் 17 அன்று பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சின் வெளிப்படைத்தன்மை மற்றும் முகாமைத்துவம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்து ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களம்அல்லது ஜனாதிபதியின் விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சவால் விடுத்தார்.
மின்வெட்டு ஏற்படுமா என்ற கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர் தற்போது திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதுவும் இல்லை என உறுதி அளித்தார். “முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே தேவையான அடிப்படை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கொள்கை ரீதியான ஆதரவை வழங்குவதே எனது பணியாக இருக்கும்இ” என்று அவர் கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சூழ்நிலை போன்ற வெளிப்புறக் காரணிகளை அரசாங்கத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் “விலை தொடர்பான சில நிகழ்வுகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” எனத் தெரிவித்தார்.