நிதித் தடைகளை ஈரானிய அமைப்புகள் மீறிச் செயல்பட உதவியதாகக் குற்றம் சாட்டி, எட்டு கனடியப் பணப்பரிவர்த்தனை (currency-exchange) வணிகங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
“ஒப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க நிதித் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்த நடவடிக்கைகளை அறிவித்தது.
ஈரானிய ரியால்கள் மற்றும் பிற நாணயங்களை கிரிப்டோகரன்சி (cryptocurrency) போன்ற டிஜிட்டல் சொத்துக்களாக மாற்றுவதன் மூலம் இந்த வணிகங்களில் சில தங்களின் வருவாயைச் சலவை செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இ வணிகங்களில் சில போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உதவியதாகவும் சேர்த்துக் கூறியுள்ளது.
“ஈரானிய ஆட்சிக்கும் அதன் பதிலாளிகளுக்கும் (proxies) தடைகளிலிருந்து தப்பிக்கும் சேவைகளை வழங்கும் சட்டவிரோத நிதி உதவி அமைப்புகளுக்குக் கனடா பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியாது,” என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் கூற்றுப்படி, இந்த வணிகங்கள் ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இவற்றில் மில்லியன் எக்ஸ்சேஞ்ச் (Million Exchange), அமீன் எக்ஸ்சேஞ்ச் (Amin Exchange) மற்றும் கிரிப்டோரொயல் (Cryptoyal) ஆகியவை அடங்கும்.
இந்தத் தடைகள் நிறுவனங்களை அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து திறம்படத் துண்டிக்கின்றன, மேலும் அமெரிக்காவில் அவை வைத்துள்ள எந்தவொரு சொத்துக்களையும் முடக்குவதுடன், அமெரிக்க நபர்கள் அல்லது அமைப்புகளுடனான பரிவர்த்தனைகளிலிருந்தும் அவற்றை விலக்குகின்றன.
அமெரிக்க நிதி அமைச்சின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, கனடாவின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அறிக்கைகள் பகுப்பாய்வு மையம் (FINTRAC) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பணப்பரிவர்த்தனை வணிகங்களுக்கு எதிரான தடைகளை விதிக்க அமெரிக்க நிதிசார் குற்றங்கள் அமலாக்க வலையமைப்புடன் (FinCEN) இணைந்து பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளது.
“பணமோசடி, பயங்கரவாத நிதி மற்றும் தடைகளிலிருந்து தப்புதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட சர்வதேச நிதி புலனாய்வுப் பிரிவுகளுடன் ஃபின்றாக் (FINTRAC) தவறாமல் செயல்படுகிறது,” என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம், உலகெங்கிலும் உள்ள நிதி புலனாய்வுப் பிரிவுகளுக்கு உளவுத்துறைத் தகவல்களை வெளிப்படுத்த இந்த மையத்தால் முடிகிறது.”
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையில், அமெரிக்க நிதி அமைச்சு, அதன் பணமோசடி எதிர்ப்புப் பிரிவான ஃபின்சென் (FinCEN), MEXC குளோபல் (MEXC Global) என்ற பணப்பரிவர்த்தனை நிறுவனத்தைக் இலக்கு வைத்து ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சீஷெல்ஸில் (Seychelles) பதிவுசெய்யப்பட்ட MEXC குளோபல் நிறுவனத்தைக் குறிப்பிடும் ஃபின்சென், ஈரான், வடகொரியா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய சட்டவிரோதப் பரிவர்த்தனைகளிலும், பிற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடனான பரிவர்த்தனைகளிலும் குறைந்தது 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு அது வசதி செய்து கொடுத்துள்ளதால், அந்நிறுவனம் தொடர்பான நிதிப் பரிமாற்றங்களைச் செயலாக்குவதிலிருந்து அமெரிக்க நிதி நிறுவனங்களை இந்த உத்தரவு தடுக்கிறது என்று கூறியுள்ளது.
டெஹ்ரான் மீதான மேலதிக அழுத்தம்
அமெரிக்க நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதன் தடைகள் பிரச்சாரமானது “ஈரானிய ஆட்சியையும், கனடாவாலும் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையையும் (IRGC) தாங்கிப் பிடிக்கும் பொருளாதார உயிர்நாடிகளைத் துண்டிப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதன்கிழமை, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் விமான நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை ஈரான் மீறுவதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டி, இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள வலையமைப்பு ஒன்றுக்கு அமெரிக்க நிதி அமைச்சு தடை விதித்தது. இந்த வலையமைப்பு வடஇந்திய நகரமான சண்டிகரைச் சேர்ந்த சுநீல் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஜஸ்ப்ரீத் பிரீதி ஷாஹித் ஆகியோரால் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க நிதி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஈரானின் ரியால் மதிப்பைப் புதிய சரிவுக்குத் தள்ளியுள்ளதுடன், பணவீக்கத்தைச் சுமார் 90 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்றும் அமெரிக்கா கடந்த வாரம் உரிமை கோரியுள்ளது.
கனடாவில் அடையாளம் காணப்பட்ட வணிகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:
-
டைவர்ஸ் ட்ரேட் இன் கார்ப்பரேஷன் (Diverse Trade Inc), ஒன்ராறியோவில் மில்லியன் எக்ஸ்சேஞ்ச் (Million Exchange) என்ற பெயரில் இயங்குகிறது.
-
1380079 BC லிமிடெட், பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமீன் எக்ஸ்சேஞ்ச் (Amin Exchange) என்ற பெயரில் இயங்குகிறது.
-
டாப் பிசி டெக்னீஷியன் இன் கார்ப்பரேஷன் (Top PC Technician Inc), ஒன்ராறியோவில் இயங்குகிறது.
-
என்ஐஏ நேஷன்ஸ் கரன்சி லிமிடெட் (NIA Nations Currency Ltd), பிரிட்டிஷ் கொலம்பியாவை மையமாகக் கொண்டது.
-
2397639 ஒன்ராறியோ லிமிடெட், ஃபரா எக்ஸ்சேஞ்ச் (Farah Exchange) என்ற பெயரில் இயங்குகிறது.
-
ஒன்ராறியோவில் உள்ள CCC இன் கார்ப்பரேஷன்.
-
B கேலக்ஸி இன் கார்ப்பரேஷன், ஒன்ராறியோவில் CCC இன் கார்ப்பரேஷன் இயங்கும் அதே இடத்திலிருந்து கிரிப்டோரொயல் (Cryptoyal) என்ற பெயரில் இயங்குகிறது.
-
ஒன்ராறியோவில் உள்ள தர்விஷ் எக்ஸ்சேஞ்ச் (Darvish Exchange).