பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் 8 ஈரானியப் பெண்களை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப்,
“எனது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஈரானியத் தலைவர்களே, அந்த எட்டுப் பெண்களை விடுவித்தால் நான் பெரிதும் பாராட்டுவேன். அவர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காதீர்கள். இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்,” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய நீதித்துறை 8 பெண்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்தத் தலையீட்டை மேற்கொண்டுள்ளார். அந்தப் பெண்களின் அடையாளம் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனினும், ட்ரம்ப்பின் இந்தப் பகிரங்க கோரிக்கை, வரவிருக்கும் பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் விவகாரத்தை ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சிஎன்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இரண்டு முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:
பேச்சுவார்த்தையில் அமெரிக்கா “மிக மிக வலிமையான” நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காகத் தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவை அவர் இஸ்லாமாபத்திற்கு அனுப்பியுள்ளார்.
இன்று புதன்கிழமையுடன் (ஏப் 22) தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், அதற்குள் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது “ஏராளமான குண்டுகள்” வீசப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், ட்ரம்ப்பின் இந்த “அமைதி மற்றும் அச்சுறுத்தல்” கலந்த அணுகுமுறை சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.