கரிபியன் நாடான ஹெயிட்டி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘குழு மோதல் தடுப்புப் படை’ பிரிவில் இலங்கை இராணுவத்தினரை இணைப்பது தொடர்பில் ஐநா அதிகாரிகளுடன் இலங்கை உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, நியூயோர்க்கிலுள்ள ஐநா தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
அதில் ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜெயந்த ஜயசூரிய மற்றும் இராணுவ ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஹெயிட்டியில் நிலவும் சவாலான சூழலில் இலங்கைத் துருப்புக்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் தயார்நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஐநாவின் மனித உரிமைத் தரங்களுக்கு அமைவாக, ஹெயிட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து வீரர்களும் கடுமையான ‘மனித உரிமைத் திரையிடலுக்கு’ உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை உறுதி அளித்துள்ளது.
இதற்காக ஒரு விரிவான தேசிய மனித உரிமை சரிபார்ப்பு பொறிமுறையை இலங்கை அரசு உருவாக்கி வருவதாகப் பாதுகாப்புச் செயலாளர் ஐநா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஐநா செயல்பாட்டு ஆதரவுப் பிரிவின் கீழ்-செயலாளர் அதுல் காரே மற்றும் சீருடைப் படைத்திறன் ஆதரவுப் பிரிவின் பணிப்பாளர் மைக்கேல் முலிங்கே கிதிவி ஆகியோரைச் சந்தித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான நுணுக்கங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள ஐநா வதிவிடப் பிரதிநிதியுடன் இணைந்து, சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப இந்தப் படைப் பிரிவை வழிநடத்த இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி காக்கும் பணிகளில் இலங்கையின் பங்கை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த ஹெயிட்டி நிலைப்பயணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.