கடந்த வாரம் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) கென்ட்வில் பகுதியில் இரண்டு கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்த தீ விபத்து தொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் மீது தீவைப்பு (Arson) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் ‘வெப்ஸ்டர் கோர்ட்’ (Webster Court) பகுதியில் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இரு கட்டிடங்களுக்கும் இடைப்பட்ட சந்துப் பகுதியில் (Alley) ஆரம்பமான இந்தத் தீ, அடுத்தடுத்து இருந்த இரண்டு கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது.
தீயானது சுவர்களின் வழியே கூரை வரை பரவியதால், அங்கிருந்த சூரிய ஆற்றல் நிறுவனம் (Solar company) ஒன்றின் அலுவலகம் பலத்த சேதமடைந்ததாக கென்ட்வில் தன்னார்வ தீயணைப்புப் படையின் துணைத் தளபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாண அரசு அலுவலகம் ஒன்று இந்த விபத்தில் சிறியளவில் சேதமடைந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் இரண்டு கட்டிடங்களுக்குள்ளும் எவரும் இருக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக ஆண்ட்ரூ பால்ட்சர் (Andrew Baltzer) என்பவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த தீவைப்பு குற்றச்சாட்டுகள் – 2 (Two counts of arson causing damage to property)
-
நன்னடத்தை விதியை மீறியமை (A breach of probation order)
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், திங்கட்கிழமையன்று கென்ட்வில் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்