சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 17-ஆம் தேதி முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதிகரிக்கும் குறுக்கீடுகளால் நேர மாற்றம்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கமாகக் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைய வேண்டிய அவை, கடந்த சில நாட்களாக மாலை வரை தொடர்ந்து நீடிக்கிறது. “புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிப் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவே கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது விவாதங்களில் குறுக்கீடுகள் பெருமளவு அதிகரித்து வருகின்றன,” எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கவலை தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17 முதல் புதிய கட்டுப்பாடு:
மேலும், “உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து, அவையின் நேரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, வரும் 17-ஆம் தேதி முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். 10 நிமிடங்கள் நிறைவடைந்ததும், உடனடியாக அடுத்த உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக உறுப்பினர்கள் யாரும் சங்கடப்படத் தேவையில்லை,” என அவர் அதிரடியாக அறிவித்தார்.
எழுத்துப்பூர்வமாகப் பிரச்சினைகளை அளிக்கலாம்:
இந்த நேரக் கட்டுப்பாட்டிற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சபாநாயகர், “தொகுதிப் பிரச்சினைகளை உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக அளித்தால், அவற்றை அவையில் பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை முடிந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்து பெற்றுக்கொண்டு, அவற்றை மக்களிடம் உறுப்பினர்கள் எடுத்துச் செல்லலாம்,” என்றும் அறிவுறுத்தினார்.
#TNAssembly #SpeakerJCDPrabhakar #MLASpeechTimeLimit #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates