இணையவழி ஊடாகச் சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல் மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமைப் பொருட்களைத் தயாரித்தல், வைத்திருத்தல், விநியோகித்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் (OPP) ‘புரொஜெக்ட் டைம்’ (Project Time) எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப் பரந்த அளவிலான நடவடிக்கையின் மூலம், 51 சிறுவர்கள் குற்றவாளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் திட்டத்தின்கீழ் பொலிஸாரால் மொத்தம் 264 குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 213 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில் வெளியான முக்கிய விபரங்கள்:
பொறுப்புமிக்க பதவிகள்: குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர் சமூகத்தில் “பொறுப்புமிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய உயர் பதவிகளில்” இருந்தவர்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீண்டும் குற்றமிழைத்தவர்கள்: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற பழைய குற்றவாளிகளாவர் (Repeat offenders).
ஆதாரங்கள் பறிமுதல்: விசாரணைகளின் போது கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்ட 814 மின்னணு சாதனங்கள் (Electronic devices) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடரும் விசாரணைகள்: இக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் 154 வழக்குகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸ் ஆணையாளரின் எச்சரிக்கை:
இச் சோதனை நடவடிக்கை குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஒன்டாரியோ மாகாண பொலிஸ் ஆணையாளர் தோமஸ் காரிக் (Thomas Carrique);
“ஒவ்வொரு சிறுவனும் இணையத்திலும், தான் வாழும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவர்களின் உரிமையாகும். சிறுவர்களைக் இரையாக்கும் இத்தகைய குற்றவாளிகளைத் தொடர்ந்து வேட்டையாடவும், அவர்களின் குற்றவியல் நடவடிக்கைகளை முடக்கவும் ஒன்டாரியோ பொலிஸார் உறுதியுடன் செயற்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தின் 25 பொலிஸ் பிரிவுகள், சட்டமா அதிபர் திணைக்களம் (Ministry of the Attorney General) மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்பன இணைந்தே இப் பிரம்மாண்ட கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
சமீபகாலமாக இணையவழிச் சிறுவர் பாலியல் சுரண்டல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பொலிஸார், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.