சென்னை:
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் எப்போது நடத்துவார்கள் என்று வெறியோடு காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். இவ்விழாவில் பேசிய சீமான், நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணராமல் நடிகரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டனர் என்று முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். திராவிட அரசியலுக்கு எதிரான கருத்துகளை முதலில் முன்வைத்தது நாம் தமிழர் கட்சிதான் என்றும், ஆனால் அதன் பலனை தற்போது வேறு ஒருவர் அறுவடை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இது ஒரு விளம்பர அரசு என்றும் ‘ஒன்லி ரீல்ஸ்’ அரசு என்றும் சாடினார். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய சீமான், நடிகரைப் பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். உதவித்தொகை வழங்க வேண்டுமெனில் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி நிதியிலிருந்தோ வழங்கலாம்; அரசுப் பணியை வழங்குவது சாட்சிகளைக் கலைப்பதற்கான முயற்சியாக இருக்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் 5 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும், 151 உயர் மருத்துவப் படிப்பு இடங்களைத் தமிழகம் இழந்துவிட்டதையும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும், குடிநீர், சுற்றுச்சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், முதலமைச்சர் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒரு ரீல்ஸ் வெளியிட முதல்வர் விஜய் தயாராக இருந்தார், ஆனால் அதற்குள் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், விஜய்யிடம் நீங்கள் இங்கு வந்தால் கலவரம் ஏற்படும், அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துவிட்டார் என்று விமர்சித்தார். பல அதிரடி கருத்துகளை முன்வைத்த சீமான், இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று வெறியோடு காத்திருப்பதாகக் கூறினார்.
#Seeman #ByElectionTN #CMVijay #TVKGovt #NTK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #KarurStampede #PoliticalUpdate #TamilNewsLive