“தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
கடந்த மே 19-ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா இராமநாதன் எம்.பி., பாராளுமன்ற நூலகத்தில் வைத்து கௌசல்யா நரேந்திரன் என்ற பெண் தொடர்பில் தான் தவறாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் ஒருவரைத் தான் சந்திக்கவே இல்லை என்றும், அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இத்தகைய பொய்யான கருத்துகள் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும், இது தனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, குறித்த எம்.பி. மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தனது பெயரைச் சிதைத்தமைக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.