குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில், அருச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதனால், அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்க முடியாது என மணிவண்ணன் வலியுறுத்தினார்.
இவர் இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் துப்பாக்கி இருப்பதாக மிரட்டியுள்ளதாகவும், சமூகத்தை பயமுறுத்தும் வகையில் துப்பாக்கியை பயன்படுத்துகிறார் என நீதிமன்றிலும் சுட்டிக்காட்டி, அருச்சுனாவின் விளக்கமறியலை நீடிக்குமாறு மன்றிடம் கோரியதாக தெரிவித்தார்.
ஆனால் இளவாலை பொலிஸார் விளக்கமறியலை நீடிக்க தேவையில்லை என்றும் தமது விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும் கூறவே, நீதிமன்று அருச்சுனாவை பிணையில் செல்ல அனுமதித்தது.
இருப்பினும், துப்பாக்கி சான்றுப் பொருளாக மன்றில் பாதுகாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி அனுமதி தொடர்பில் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது