சென்னை:
கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதை அரசு கூற வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு அரை நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் 21 சதவீதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மூலதனச் செலவு எவ்வளவு?:
குறைந்த அளவு கடன் வாங்கியதைச் சாதனையாக முன்னிறுத்தும் தவெக அரசு, கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதையும், முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும், மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? திமுக ஆட்சியின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. CAG கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.13,002.22 கோடி மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு அதே காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்று அவர் கேட்டுள்ளார்.
நிலுவை சேமிப்பாகுமா?:
வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.48,000 கோடி கடன் திட்டம்:
முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகம். வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதைவிட அரசின் வருவாய் குறைவாக இருக்கும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகள் மோசமாக உள்ளன, கட்டடப் பணிகள் பாதியில் நிற்கின்றன, ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். இதனைச் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, முழு விவரங்களையும் வெளியிட்டுத் தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
#ThangamThennarasu #DMK #TVKGovt #TNDebt #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive