சென்னை:
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நேரடி வார்த்தைப் போர் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் விமர்சனம்:
தமிழகத்தில் தவெக பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாகவும், குழந்தைகள் காணாமல் போவதாகவும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாகத் துப்பாக்கி ஹீரோ எனப் பாராட்டப்பட்டவர் தற்போது துப்பில்லாத ஹீரோ என முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருந்த அவர், பட்டு வேஷ்டி அணிவது, கோட் சூட் போடுவது, கான்வாயில் வலம் வருவது என மூடநம்பிக்கையிலிருந்து அவர் எப்போது வெளிவருவார் என்றும், எப்போது சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வார் என்றும் சரமாரியாக விமர்சித்திருந்தார்.
அன்பில் மகேஷ் கைது:
இதனிடையே, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஐடி விங் பதிலடி:
இந்த நிலையில், தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இனிவரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள்” என்று எச்சரித்துள்ளது. மேலும், “நாங்கள்தான் ஆலமரம், யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி” என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒருபுறம் பள்ளிக் கல்வியில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது செய்யப்பட்டுள்ளார், மறுபுறம் அரசு வேலைக்காகப் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்த மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு உத்தமர் வேடம் போடுவதற்கு கூசவில்லையா ‘Senior Generational abuser’ என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “கொள்கைதான் உயிர்” என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தப் பண்ணையார் கட்சியின் வரலாறு என்று விமர்சித்துள்ள தவெக, ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று புலம்பும் ‘Sweet Uncle’, இனி வரும் காலங்களில் திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள், அதற்கும் சேர்த்துப் புலம்பித் தள்ளுங்கள் என்று மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது.
#TVKITWing #DMK #CMVijay #MKStalin #AnbilMahesh #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive