சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட கருத்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீட்டர் நவரோவின் காட்டமான பதிவு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் மார்க் கார்னி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து வர்த்தக வரிகளைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், கனடாவின் வாகனத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீட்டை வரவேற்கத் தயார் என கார்னி சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பீட்டர் நவரோ, “அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவைப் பயன்படுத்த உண்மையிலேயே மிரட்டுகிறீர்களா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சீனா கனடாவை உயிரோடு விழுங்கப் போகிறது என்பதைக் குறித்துத்தான் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டும் — ஏற்கனவே அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. வான்கூவர் இப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் (BC) இல்லை, அது சீன மக்கள் குடியரசாக (PRC) மாறிவிட்டது” என்று சாடியுள்ளார். கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ராவும் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க – கனடா வாகனத் துறை மோதல் அதிபர் டிரம்ப் கனடாவின் வாகன இறக்குமதிகள் மீது 25 சதவீத வரி விதித்துள்ளதோடு, 2027 ஜனவரி 1 முதல் இதனை 50 சதவீதமாக உயர்த்தப் போவதாகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் வட அமெரிக்க வாகனச் சந்தையின் ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பிரதமர் கார்னி, “அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதைப் பொறுத்து, ஐரோப்பிய, ஜப்பானிய அல்லது சீன நிறுவனங்கள் உள்ளிட்ட மாற்று வழிகளை கனடா பரிசீலிக்கும்” என்று கம்போடியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான உத்தி அல்ல, மாறாக ‘செயலுக்கு எதிர்வினை’ என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சீன நிறுவனங்களுக்குத் திறக்கப்படும் கதவுகள் அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் காரணமாக, பிராம்ப்டன் நகரில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் மின்சார வாகனத் தயாரிப்பு ஆலைப் பணிகள் நிறுத்தப்பட்டு, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கனடாவின் வாகனத் துறைக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், உள்ளூர் விநியோகச் சங்கிலி மற்றும் கனடியர்களின் கட்டுப்பாடு ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சீன மின்சார வாகன (EV) நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் (Joint Ventures) ஈடுபட கனடா அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரியில் சீன மின்சார வாகனங்களுக்கான வரியை 100 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக கனடா குறைத்ததைத் தொடர்ந்து, சீனாவுக்கான கனடாவின் ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து 33.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.