வீதி விதிகள் பொலிஸாருக்காக அல்ல; உயிர்களைக் காப்பதற்காக – ஆளுநர்.

வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன், ஒவ்வொரு வீதி உபயோகத்தரிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, உயிரின் பெறுமதி குறித்த அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், வீதி விதிகள் பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டவை அல்ல, அவை எமது உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், கிளிநொச்சி நகர ரோட்டரி கழகத்தின் வீதிப் பாதுகாப்புக் கல்வியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதை ஒரு முக்கியமான சமூகப் பொறுப்பாகக் கருதுவதாகத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் இதுவரை இத்தகைய அளவில் வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும், இத்தகைய நிகழ்வுகளின் தேவை தற்போது மிகவும் அவசியமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் வீதி விபத்து என்பது எப்போதாவது நிகழும் துயரச் சம்பவமாக இருந்தது. இன்று அது அன்றாடச் செய்தியாக மாறிவிட்டது. போர்க்காலத்தில் தினமும் உயிரிழப்புச் செய்திகளைக் கேட்டு வந்தோம். இன்று வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் செய்திகளைத் தொடர்ந்து கேட்கின்றோம் என வேதனையுடன் குறிப்பிட்டார்.
வீதி விபத்துகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுக்கு அடிப்படையாக அமையும் முக்கியமான மனிதப் பண்புக் குறைபாடுகளாகப் பொறுமையின்மையையும் சகிப்புத்தன்மையின்மையையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று, உயிரின் பெறுமதி குறித்த அக்கறையும் சிலரிடம் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தம்மை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கின்றது என்பதைச் சாரதிகள் நினைவில் கொள்ள வேண்டும். எதிரே வருகின்ற வாகனத்திலும், வீதியில் பாதசாரியாகச் செல்பவருக்குப் பின்னாலும் இன்னுமொரு குடும்பம் இருக்கின்றது. எனவே, வேகமாகச் சென்றடைவதைவிடப் பாதுகாப்பாகச் சென்றடைவதே முக்கியம் என்றார்.
நாம் எமது வாகனத்தைப் பாதுகாப்பாகச் செலுத்தி, வீதி விதிகளைச் சரியாகப் பின்பற்றினாலும் எதிரே வருபவர் எவ்வாறு வாகனத்தைச் செலுத்துவார் என்பதை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. தமது உயிரைப் பற்றிய அக்கறையோ, சமூகப் பொறுப்புணர்வோ இல்லாமல் செயற்படுபவர்களால், விதிகளை மதித்து நடக்கும் ஏனைய வீதி உபயோகத்தர்களும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுகின்றது. எனவே, பாதுகாப்பான பயணம் என்பது தனிநபரின் பொறுப்பு மட்டுமல்ல் வீதியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் உள்ள கூட்டுப் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
போர்க்காலத்தில் எமது உயிரைப் பாதுகாப்பதற்காக எவ்வளவு எச்சரிக்கையுடன் இருந்தோம் என்பதை நினைவூட்டிய ஆளுநர், இன்று அமைதியான சூழலில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், எமது பொறுப்பற்ற நடத்தைகளால் நாமே எமது உயிரையும் மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் தள்ளுகின்றோம் என்றார்.
சட்டத்தின் மீதான அச்சமும் மரியாதையும் குறைந்து வருவது விபத்துகளுக்கான மற்றொரு காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பொலிஸார் நிற்கின்றார்களா என்று பார்த்தே தலைக்கவசம் அணிவது, வேகத்தைக் கட்டுப்படுத்துவது, வீதி ஒழுங்குகளைப் பின்பற்றுவது என்ற மனநிலை மாற வேண்டும் என்றார்.
பொலிஸார் இல்லாத இடத்திலும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில், அந்த விதிகள் பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டவை அல்ல, எமது உயிரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை. வீதிகள் இன்று மேம்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ற பொறுப்பான வீதி நடத்தைகள் வளர்ச்சியடைய வேண்டும். வீதிகள் செப்பனிடப்படாமல் இருந்த காலங்களில் விபத்துகள் குறைவாக இருந்ததையும், அக்காலத்தில் போதைப்பொருள் பாவனை காணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், தற்போது போதைப்பொருள் அல்லது மதுபானத்தைப் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவதை ஒருபோதும் சாதாரணமாகக் கருத முடியாது என்றார்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான தயவுதாட்சண்யமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் செல்வாக்கு அல்லது வேறு காரணங்களால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
சில இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தியவர்களுக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். பொலிஸ் துறையின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், கீழ்மட்டத்திலும் அதற்கேற்ற பொறுப்புணர்வும் மாற்றமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தவறிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எந்தவொரு தவறும் செய்யாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் ஒரே விபத்தில் உயிரிழந்தமை மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.
விபத்துக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றமை, சாரதியின் அடையாளம் தொடர்பில் ஆள்மாறாட்டம் இடம்பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் உள்ளிட்ட விடயங்கள் மேலும் கவலையளிக்கின்றன. இவை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். ஆனால், ஒரு வழக்கு நிறைவடைவதால் அந்தக் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. உயிரிழந்த குழந்தையை மீண்டும் பெற்றோரிடம் கொண்டுசேர்க்க முடியாது; அந்தத் தந்தையை அவரது குடும்பத்திடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது. இத்தகைய துயரங்களைத் தவிர்ப்பதே எமது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
போதைப்பொருள் அல்லது மதுபானத்தைப் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவது பொதுமக்களின் உயிருக்கு நேரடியான அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அண்மையில் செம்மணிப் பகுதியில் யாழ்ப்பாணப் பொலிஸாரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியும் இணைந்து வாகனச் சாரதிகளிடம் மேற்கொண்ட போதைப்பொருள் பயன்பாட்டுப் பரிசோதனையைப் பாராட்டினார்.
அன்றைய தினம் 52 சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சோதனைகள் தொடர்ச்சியாகவும் வௌ;வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளின் பாதுகாப்பான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏராளமான பயணிகளின் உயிர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஒவ்வொரு சாரதியும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கடந்த பத்து ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 1,369 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 316 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். இதே காலப்பகுதியில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியை விடச் சனத்தொகையில் பல மடங்கு அதிகமான கொழும்பு மாவட்டத்தில், அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டபோதிலும், வீதி ஒழுங்குகள் ஒப்பீட்டளவில் சிறப்பாகப் பின்பற்றப்படுவதால் விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மறுபுறம், ஒப்பீட்டளவில் போக்குவரத்து நெரிசல் குறைந்த கிளிநொச்சியில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் சார்பில் கலந்துகொண்ட தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர், வீதி விபத்துகளால் காயமடைவோருக்குச் சிகிச்சையளிப்பதற்கும் அவர்களைப் பராமரிப்பதற்கும் சுகாதாரத் துறை கணிசமான நிதியைச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், விபத்துகளாலும் அவற்றின் தொடர்ச்சியான விளைவுகளாலும் இலங்கை ஆண்டுதோறும் சுமார் 836 பில்லியன் ரூபா செலவினத்தை எதிர்கொள்வதாக நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
நிகழ்வின் முக்கியமான தருணமாக, பரந்தனில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது இளைய சகோதரனை இழந்த சகோதரி ஒருவர், அந்த விபத்தால் தாம் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்கொண்ட துயரங்களையும் இழப்புகளையும் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்.
விபத்து என்பது ஏனையவர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அது வாழ்நாள் முழுவதும் தொடரும் வலி. தமது உறவினரை இழந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர்கள் குற்ற உணர்வின்றி மீண்டும் வீதிகளில் போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதைக் காணும்போது ஏற்படும் வேதனையையும் அவர் எடுத்துரைத்தார்.
விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவு, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் கையாள்வதற்கான உதவிகள் தொடர்பிலும் இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்புப் பயிற்சியகம் தொடர்பிலும் நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது. இத்தகைய பயிற்சியகத்தின் ஊடாக வீதி உபயோகத்தர்களிடையே பாதுகாப்பான பயணப் பழக்கங்கள், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான வாகனச் செலுத்தல் தொடர்பான அறிவை வளர்ப்பதுடன், நீண்டகால அடிப்படையில் விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீதி விபத்துகளைக் குறைப்பதற்குச் சட்டங்களை வலுப்படுத்துவதன் அவசியம், பாடசாலை மட்டத்திலிருந்து மாணவர்களிடையே வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், மாற்றத்துக்குத் தேவையான சமூகப் பங்களிப்பு ஆகியனவும் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ–9 வீதிக்கு மாற்றான வீதிகளைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரை உள்ளிட்ட போக்குவரத்து ஒழுங்கமைப்பு தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களுடன் துணைநிற்பதும், உயிர் தப்பியவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதும், எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்தியது.
‘
X5AARUHG3NG3TE5MOUZFFUYZZE

அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவைப் பயன்படுத்துகிறீர்களா? — கனடா பிரதமருக்கு டிரம்பின் வர்த்தக ஆலோசகர் கடும் எச்சரிக்கை

November 17, 2026

சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட கருத்துகளுக்கு, அமெரிக்க

canada china

கனடா – சீனா புதிய வர்த்தக மற்றும் கலாச்சார ஒப்பந்தங்கள்: 400 மில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு வரி விலக்கு

November 17, 2026

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி,

8

“ஒரு கம்யூனிஸ்ட் எம்.பி இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்!” – சு.வெங்கடேசன் குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை கருத்து!

November 17, 2026

மதுரை: நூலகங்களுக்குப் புத்தகக் கொள்முதல் செய்ததில் பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கின் விசாரணையின்போது, மதுரை

6

“அண்ணன் சீர் திட்டம்!” – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு!

November 17, 2026

சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான ‘அண்ணன் சீர்’ திட்டத்தில் பயன்பெறுவதற்கான

88

“நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு!” – அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் அதிரடிக் கைது!

November 17, 2026

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த மாபெரும் முறைகேடு வழக்குத் தொடர்பாகத் தமிழகம் முழுவதும்

5

“அரோகரா சர்ச்சையில் நான் பாடியதில் எந்தத் தவறுமில்லை!” – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்!

November 17, 2026

சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நாட்டுப்புறப் பாடகர்

17

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

November 17, 2026

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4

“திருச்செந்தூர் சூரசம்ஹார விவகாரம்!” – தவெக அரசின் ‘ரீல்ஸ்’ மோகம் குறித்து இ.பி.எஸ் கடும் கண்டனம்!

November 17, 2026

சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சரையும் அமைச்சரையும் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டுப் பாடியதற்கும், தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ‘ரீல்ஸ்’

3

“மீண்டும் தேர்தல் வந்தால் 30 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறுவார் விஜய்!” – வைகோ அதிரடி பேட்டி!

November 17, 2026

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வந்தால், தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தற்போதுள்ளதை விட 30 இடங்கள் கூடுதலாக வெற்றி

2

“திமுகவின் குதிரை பேரம்!” – மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்!

November 17, 2026

சென்னை: திமுகவின் குதிரை பேரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்

1

“தவெக ஆட்சி கலப்பட ஆட்சி!” – சூரசம்ஹார விவகாரத்தில் சேகர்பாபு விமர்சனம்!

November 17, 2026

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும், தற்போதைய தவெக

vetha111111

வீதி விதிகள் பொலிஸாருக்காக அல்ல; உயிர்களைக் காப்பதற்காக – ஆளுநர்.

November 17, 2026

வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன், ஒவ்வொரு வீதி உபயோகத்தரிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, உயிரின் பெறுமதி குறித்த அக்கறை