சென்னை:
முந்தைய திமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த மாபெரும் முறைகேடு வழக்குத் தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு, அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மோசடி:
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களில், அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்குச் சொந்தமான புத்தகங்கள் மிகவும் தரமற்று இருப்பதாகவும், அவை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியாக எழுதப்பட்டிருப்பதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த இரு பதிப்பகங்களின் பெயரில் தரமற்ற 1,857 தலைப்பிலான புத்தகங்கள் பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான புத்தகங்களின் பன்னாட்டுத் தரப் புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியாக அச்சிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் உத்தரவின் பேரில், ஊழல் தடுப்புத் துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கினர்.
11 பிரிவுகளில் வழக்கு:
முதல் கட்ட விசாரணையில், இந்தத் தரமற்ற புத்தகங்களை வழங்கியது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான பதிப்பகங்கள் என்பது உறுதியானது. இதையடுத்து, பதிப்பக உரிமையாளர் மோகன் மற்றும் சில அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம், நம்பிக்கை மோசடி, ஆள்மாறாட்டம் செய்தல், அரசை ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 11 கடுமையான பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 இடங்களில் சோதனை:
இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை மடிப்பாக்கம், கோவை பெரியார் அறிவுலகப் பதிப்பக நூலகம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் எனத் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின் முடிவில் பதிப்பக உரிமையாளர் மோகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எஃப்.ஐ.ஆர் தகவல்கள்:
முதல் தகவல் அறிக்கையில் (FIR), அரசு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் நிதியில் வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 48 புத்தகங்களுக்கு ISBN எண்ணும், உயர்நிலைக் குழு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பதிப்பகங்களும் சாட்ஜிபிடி மூலம் புத்தகங்களை எழுதியதால், அவை தரமற்ற மொழிநடை மற்றும் தவறான தகவல்களுடன் உள்ளன. எந்தத் தகுதியும் இல்லாத புத்தகங்களை வழங்கி அவர்கள் அரசையும் மக்களையும் ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#BookProcurementScam #AgalVilakkuPublisher #DVAC #TVKGovernment #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive