10 நவம்பர் 2026
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட பதில்-சுங்கவரிகளிலிருந்து அளிக்கப்பட்ட சில விலக்குகளைக் கனடா நீடித்துள்ளதாகவும், இந்த வரி விலக்கிற்குத் தகுதியுடைய இறக்குமதிகளின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
கனடிய நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் சாம்பேன் (Francois-Philippe Champagne) இந்த மாற்றங்களை ஓர் அறிக்கையில் அறிவித்தார். அமெரிக்கச் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதும், சாத்தியமான இடங்களில் கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இத நோக்கம் என்று அவர் கூறினார்.
‘ஹொரிசாண்டல் ரிமிஷன்’ (horizontal remission) எனப்படும் பரந்த அளவிலான இந்த வரி விலக்கு, 2028 ஜூன் 30 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுரங்கத் தொழில், கல் குவாரி தொழில் அல்லது எண்ணெய் மற்றும் எரிபொருள் பிரித்தெடுக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இரும்பு அல்லாத பொருட்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளவை உட்படப் பொதுக் கல்வி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விலக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கனடாவிலேயே நம்பகமான முறையில் பெறக்கூடிய பொருட்களை இந்த நிவாரணத் திட்டத்திலிருந்து சிறுகச் சிறுக நீக்கவுள்ளதாக ஒட்டாவா (Ottawa) தெரிவித்துள்ளது.
கனடாவில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் போது அல்லது தற்போதைய ஒப்பந்தங்களின்படி அமெரிக்காவிலிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில், அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிறுவனங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விலக்கை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.