அனலைத்தீவு மக்களின் சுகாதாரத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (28/06) அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது வைத்தியசாலையின் மருந்து விநியோகம், மருத்துவ உபகரணங்கள், மனித வளம், அவசர சிகிச்சை வசதிகள், தாய்-சேய் நல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அனலைத்தீவில் அவசர மருத்துவத் தேவையுள்ள நோயாளிகளை அவர்களது வீடுகளிலிருந்து வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும், சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கும், தற்போது அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் உள்ள நோயாளர் காவு வண்டியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நிலையப் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதாரப் பணியாளர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்