நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பண்டுல குணரத்ன, நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) செயலாளர் பிரசன்னா அல்விஸினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதன் மூலமும், நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதன் மூலமும் செயல்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரிடம் நீதவான் குணரத்ன கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பாவிப் பொதுமக்கள் மீது தேவையற்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு நீதவான் முன்னதாக பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் கோரியிருந்தார்.
இதற்கிடையில், நீதவான் குணரத்னவுக்கு எதிராகப் பொலிஸ் மா அதிபரும் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அது தொடர்பில் நீதவானிடம் ஆணைக்குழு விளக்கங்களைக் கோரியிருந்தது.
நீதவான் தனது அவதானிப்புகளையும் விளக்கங்களையும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சிறிது நேரத்திலேயே இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.