027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை (30) காலை 6.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை (01) காலை 6.30 மணி வரை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர், சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்கவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (27) அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது. அதேவேளை, எமது பணிக்குழுவினர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்த போதிலும், அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க இதுவரையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டின் அரச சேவையில் குறைந்த சம்பளப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான ஊழியர்களால் தற்போதைய பணவீக்க நிலைமையை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், குறைந்த வருமானம் பெறும் அரச ஊழியர்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 92 சதவீதத்தை வருமான வரிகள் மூலம் மீளப் பெற்றுக்கொள்ளவும், அதில் 58 சதவீதத்தைப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் மூலம் ஈட்டிக்கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தாம் ஈட்டும் வருமானத்தின் கணிசமான பகுதியை மீண்டும் அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பொருளாதாரச் சூழலில், அரச சேவையின் குறைந்த சம்பளப் பிரிவினருக்கான சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டில் 1,137 ரூபாவிலிருந்தே ஆரம்பமாகிறது. அத்துடன், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் அடுத்த வருடம் மாதாந்தம் கிடைக்கப்போவது வெறும் 500 ரூபா மாத்திரமேயாகும். இந்தத் தொகை தற்போதைய வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்குப் போதுமானதாக இல்லை.
இந்நிலையில், எமது சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித் தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், இதுவரையில் அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை (30) காலை 6.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை (01) காலை 6.30 மணி வரை ஒருநாள் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையானது ஐந்து பிரதான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுத்தல், ஐந்து நாள் வேலை வார முறைமையின் கீழ் வாராந்தம் மேலதிகமாகப் பணியாற்றும் எட்டு மணித்தியாலங்களுக்கான கொடுப்பனவை வழங்குதல், வைத்தியசாலைகளில் நிலவும் உதவிப் பணியாளர் பிரிவினருக்கான வெற்றிடங்களை நிரப்புதல் ஆகியவை பிரதான கோரிக்கைகளாகும்.
அத்துடன், இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்தல், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் அடக்குமுறைச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் மீளப்பெறுதல் என்பனவாகும்
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் இதன்மூலம் அறியத்தருகின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.