ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலுகல பகுதியில், அரச பேருந்து மீது பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று(28.11.2026) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஹட்டன் நகரிலிருந்து பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த ஹட்டன் சாலைக்குச் சொந்தமான அரச பேருந்து, கலுகல பகுதியை அண்மித்தபோது, அப்பகுதியிலுள்ள மலைப்பாங்கான பிரதேசத்திலிருந்து பாரிய கற்பாறைகள் உருண்டு வந்து பேருந்தின் மீது விழுந்துள்ளன.
இதன்போது, பேருந்தில் பயணித்த அக்கரப்பத்தனைவூட்டுவில் தோட்டத்தைச் சேர்ந்த என். சுதர்ஷன் (வயது 39) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் ஒரு வயது குழந்தையின் தந்தையாவார்.
அத்துடன், கொழும்பு – மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த வசந்த கௌரி (வயது 49) என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திடீரென நிகழ்ந்த இந்த அனர்த்தத்தினால் பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.