இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் இன்று (25) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது பொதுச் சுடரினை லெப்டினன்ட் கேணல் அருணா, கப்டன் லீமா மற்றும் லெப்டினன்ட் சக்தி ஆகிய மூவரின் தந்தையான இராசேந்திரம் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் மற்றும் கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது நினைவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பொதுமக்கள் பார்வையிட்டதுடன், உருவப்படங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.