வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், காணி உரிமை, சட்டப் பாதுகாப்பு, பொலிஸ் நிலையங்களில் தமிழ் பேசும் பெண் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
ஏற்கெனவே உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் வகையில் மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.