ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ‘சமிடூன்’ (Samidoun) அமைப்பின் மாற்றுப் பெயராகச் செயற்பட்டு வருவதாகக் கூறி, ‘மசார் படில்’ (Masar Badil) அமைப்பைத் தனது பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாகக் கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
டொராண்டோ நகரில் இந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்று நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக கனடிய அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, “மசார் படில் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததன் மூலம், அதன் நிதி மூலங்களைத் துண்டிக்கவும், வலைப்பின்னல்களை முடக்கவும், அதன் உறுப்பினர்களைப் பொறுப்புக்கூற வைக்கவும் சட்ட அமுலாக்கத் துறையினருக்கு மேலதிக அதிகாரங்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்தார்.
இப்பட்டியலில் இணைக்கப்பட்டதன் மூலம், கனடாவின் குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் ‘மசார் படில்’ பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுவதுடன், அக்குழுவிற்கு நிதி வழங்குவது, ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கனடிய அரசாங்கத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான நிலையம் (CIJA), பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.