வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளுக்கான சர்வதேசக் கடமைகளை கனடா முறையாக நிறைவேற்றவில்லை எனவும், தனது பாதுகாப்புக் கட்டமைப்புகளில் “குறுகிய பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களுக்கே” முன்னுரிமை அளிப்பதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) கடுமையாகச் சாடியுள்ளது.
அமெரிக்கப் போர்ச் செயலாளர் (Secretary of War) பீட் ஹெக்செத் (Pete Hegseth) தலைமையிலான அமெரிக்கப் போர் திணைக்களம் திங்கட்கிழமை (23) இணையத்தில் வெளியிட்ட அமெரிக்க-கனடா பாதுகாப்பு உறவுகள் தொடர்பான உண்மைத் தொகுப்பிலேயே (Fact Sheet) இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கனடிய இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் தயார்நிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள பென்டகன், நடப்பு நிதியாண்டில் கனடிய விமானப்படையின் 41.9 சதவீத விமானங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது வட அமெரிக்காவின் வான் பாதுகாப்புப் பணிகளுக்கு கனடா பங்களிப்புச் செய்யும் திறனை நேரடியாகப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கனடிய இராணுவம் மற்றும் கடற்படையின் தயார்நிலையும் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கனடிய அரசியல் தலைமைத்துவம் தெளிவற்ற உலகளாவிய கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதால், ஆளணி மற்றும் தளபாடங்கள் மீது அதிக சுமை ஏற்பட்டுள்ளதுடன், முக்கிய உபகரணங்களை நவீனமயமாக்கும் பணிகள் பிற்போடப்பட்டு, தயார்நிலை வீழ்ச்சியடைந்துள்ளது” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடியக் கடற்படையின் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று மட்டுமே தற்போது இயங்கும் நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பென்டகன், அமெரிக்கத் தயாரிப்பான F-35 போர் விமானங்களை முழுமையாகக் கொள்வனவு செய்வதா என்பது குறித்துப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீளாய்வு குறித்தும் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கப் போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் இரகசிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) பத்திரிகை செய்தி வெளியிட்டு இரண்டு நாட்களின் பின்னர் பென்டகனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இதேவேளை, 2035 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஐந்து சதவீதத்தைப் பாதுகாப்புத் துறைக்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ இலக்கை அடைவதற்கான தெளிவான திட்டத்தை கனடா இன்னும் வகுக்கவில்லை எனவும், 2029 பொதுத் தேர்தலுக்குப் பின்னரே இதற்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும் பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஓய்வுபெற்ற கனடிய மேஜர் ஜெனரல் ஸ்கொட் கிளான்சி (Scott Clancy), “கள மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு வழமை போல் தொடர்ந்தாலும், அரசியல் மற்றும் மூலோபாய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ச்சியான விரிசல் ஏற்பட்டு வருவதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.