சென்னை:
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
மனநல சேவைகள் கருத்தரங்கம்:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மனநல சேவைகள் மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கும் இடமாகத்தான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இருந்தது. ஆனால் இன்று அந்த அணுகுமுறை மாறியுள்ளது. காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுவதைப் போலத்தான் மூளையில் ரசாயன மாற்றத்தால் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைக்கும் மனநல மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குடும்பத்தினரும், பின்னர் சமூகமும் துணையாக நிற்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குத் தனக்கு அந்த நோய் இருப்பதே தெரியாது. இந்த நிதியாண்டில் 12 மாவட்ட ஒருங்கிணைந்த மனநலத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மற்ற மருத்துவங்களைவிட மனநல மருத்துவமனைகளில் பணிபுரிவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.
மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “மனநல சேவைகளுக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மனநலம் சார்ந்த புரிதல் மக்களிடம் குறைவாக உள்ளது. ஆரம்ப நிலையில் மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிந்தால் அதனைச் சரி செய்ய முடியும் என மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள மாவட்ட மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சைகளுக்கு முறையாகச் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது:
தொடர்ந்து டெங்கு பாதிப்பு குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதேபோல், மழைக்காலங்களில் ஏற்படும் வைரஸ் தொற்று காய்ச்சல்களும் கட்டுக்குள்தான் இருக்கின்றன,” என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்:
அவரிடம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பற்றி நீதிபதி பேசிய விஷயங்கள் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அந்த நிகழ்வு குறித்துப் பலமுறை நான் ஏற்கனவே பேசிவிட்டேன். அது முதலமைச்சரின் கவனத்தில் இருக்கிறது. அதில் ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
#MinisterArunraj #KallakurichiMLA #KilpaukHospital #MentalHealth #Dengue #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive