நாட்டில் வைத்தியர்கள் அல்லாத சுமார் 40 ஆயிரம் பேர் மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் ருவான் பெர்ணான்டொ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை கிருமிகளில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நுண்ணுயிர் கொல்லி (ஆண்டிபயாடிக்) எதிர்ப்பு ( ஆன்டிபயோடிக்) தொடர்பிலேயே இந்த நிலைமை காணப்படுகின்றது. நுண்ணுயிர் கொல்லிக்கு இசைவாக்கமடைந்து எதிர்விளைவுகள் வெளிக்காட்டாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நுண்ணுயிர் கொல்லியின் பாவனை அதிகரித்திருப்பதே இதற்குப் பிரதான காரணமாகும். முதலாவது காரணம், நோயாளர்கள் வீடுகளிலிருந்தபடியே நோய்களுக்காக நுண்ணுயிர் கொல்லி பெற்றுக்கொள்கின்றனர்.
இரண்டாவது அவர்கள் வைத்தியர்களிடம் சென்று எமக்கு நுண்ணுயிர் கொல்லி வழங்குமாறு கோருகின்றனர். அத்தோடு மக்கள் இவ்வாறான மருந்துகளைக் கோருவார்கள் என எண்ணியும், இதனை வழங்கினால் நோய் விரைவில் குணமாகும் என நினைத்து வைத்தியர்களும் அடிக்கடி நுண்ணுயிர் கொல்லி பயன்படுத்துகின்றனர்.
எவ்வாறாயினும் வைத்தியசாலைகளில் இவ்வாறு இடம்பெறுவதில்லை. அத்தோடு சுமார் 40 ஆயிரம் வைத்தியர்கள் அல்லாத நபர்களும் மருந்துகளை விநியோகிக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
இவர்களிடமிருந்து நிச்சயமாக நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறே தொடர்ந்தால், எதிர்காலத்தில் நோய்களுக்கு மருந்துகளால் எவ்வித பயனும் இல்லாமல் போய்விடும் நிலைமையே ஏற்படும். அந்த 40 ஆயிரம் பேரில் முதலாவது பிரிவினர் எவ்வித தகுதியும் அற்றவர்கள் ஆவர். அதாவது, மருத்துவக் கல்லூரிப் பக்கமே செல்லாமல் மருந்தகங்களில் பணியாற்றி மருந்துகளை அடையாளம் கண்டு கொண்டு மருந்து வழங்குபவர்களும் உள்ளனர்.
சட்டத்தின் பிரகாரம் இலங்கை மருத்துவச் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட வைத்தியர்களாலேயே மேலேதேய மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். அவர்களைத் தவிர்த்து , வைத்தியர்கள் என தெரிவித்து நுண்ணுயிர் கொல்லிகளை பரிந்துரைப்பார்களாயின், அது குறித்து கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.