சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தளர்த்துவதற்கும், கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முக்கிய வர்த்தகச் சலுகைகள் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தை 2028-ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை நீட்டிக்கவும், அதில் புதிய பொருட்களைச் சேர்க்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
-
கனடாவுக்கான பலன்கள்: உறைந்த பன்றி இறைச்சி, குளிர்ந்த நீர் இறால் (cold-water shrimp), கிரீன்லாந்து ஹாலிபட் மீன், கடல் வெள்ளரி உள்ளிட்ட கடல் உணவுகள் மீதான 25 சதவீத இறக்குமதி வரியை சீனா நீக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிகள் பலனடையும். மேலும், ஃபாவா பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகளுக்கும் சீன சந்தையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
சீனாவுக்கான சலுகைகள்: இதற்குப் பதிலாக, கனடாவில் தட்டுப்பாடு உள்ள 23 இரும்புப் பொருட்கள் மற்றும் 9 அலுமினியப் பொருட்கள் என மொத்தம் 32 சீனப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது.
மின்-வணிகம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், 2027-ஆம் ஆண்டை “மின்-வணிக ஆண்டாக” (Year of e-commerce) இரு நாடுகளும் அறிவித்துள்ளன. அலிபாபா போன்ற சீன செயலிகள் மூலம் கனடியப் பொருட்களை விற்பனை செய்ய இது வழிவகுக்கும். அத்துடன், 2027-ல் சீனாவுக்குப் பெரிய அளவிலான வர்த்தகக் குழுவை அனுப்பவும் கனடா திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் பரிமாற்றத் திட்டங்களுக்கான நிதியுதவியையும் இரு நாடுகளும் புதுப்பித்துள்ளன.
அமெரிக்க அழுத்தமும் சீனாவின் மீதான பார்வையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி மிரட்டல்களைத் தொடர்ந்து, கனடா தனது வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்தும் நோக்கில் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. முன்னதாக, சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வரியை 100 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக கனடா குறைத்ததைத் தொடர்ந்து, சீனாவின் பி.ஒய்.டி (BYD) நிறுவன வாகனங்கள் கனடாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

இருப்பினும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற உணர்திறன் மிக்க துறைகளில் சீனாவுடன் ஒத்துழைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், அமெரிக்காவை எதிர்கொள்ள சீனாவை கனடா பயன்படுத்துவதாக டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.