கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, புதன்கிழமை(28) ஆம் திகதி நண்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் லண்டன் நகரம் நோக்கிப் புறப்பட்ட, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 எனும் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவையொன்றில் மோதியதன் காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு அவ்விமானத்தின் விமானியால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விமானம் ‘ஏ-330 ஏார்பஸ்’ (A-330 Airbus) வகையைச் சேர்ந்த ஒரு விமானமாகும் என்பதுடன், அதில் 269 விமானப் பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் இருந்தனர்; மேலும், அப்பயணிகளுள் நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
இவ்விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பாதுகாப்பாக இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு உபசரிப்புக்களை வழங்குவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது, இப்பயணிகளை வேறொரு விமானத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்விமானம் இன்னும் சிறிது நேரத்தில் இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது.
அத்துடன், விபத்துக்குள்ளான விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.