சமூக ஊடகங்கள் மூலம் வணிக ரீதியான லாபம் மற்றும் இணையப் பிரபலத்தைப் பெறுவதற்காகக் குழந்தைகள் பயன்படுத்தப்படும் Kid fluencing என்ற நடைமுறையைத் தடுக்கும் வகையில், இலங்கை புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தைகளுக்கு உகந்த ஊடக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையுடன் (NCPA) இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இந்த வழிகாட்டுதல்களை இறுதிக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அமைச் சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழுவினால் வரைவு செய்யப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள், மிக விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் கவனம் ஈர்ப்பதற்காகவும் வருமானம் ஈட்டுவதற்காகவும், பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் ஆபத்தான நடவடிக்கைகள், ஆபாசமான விஷயங்கள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குறித்த கவலைகளுக்கு மத்தியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகழ் அல்லது நிதிப் பலன்களைப் பெறுவதற்காகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற ஆபத்துகளுக்கு உள்ளாக்க உரிமை இல்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், குழந்தைகளின் தனியுரிமை மற்றும் நலன் கண்டிப்பாகப் பாதுகாப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொறுப்பற்ற சமூக ஊடக நடைமுறைகள் மூலம் கடுமையான ஆபத்தில் தள்ளப்படும் குழந்தைகள், பாதுகாப்பற்றவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு தலையீடுகள் தேவைப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
சர்வதேச அளவில், சமூக ஊடகங்களில் குழந்தைகள் வணிக ரீதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கப் பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் போன்றவை, இணைய உள்ளடக்கங்களில் குழந்தைகளின் பங்களிப்பு மற்றும் அத்தகைய செயல்பாடுகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கையாள்வது தொடர்பாகச் சட்டப் பாதுகாப்புகளைப் பின்பற்றி வருகின்றன.
குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அவர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கானத் தேவைகள் மற்றும் உள்ளடக்க தயாரிப்பில் அவர்களின் பங்களிப்புக்கான கட்டுப்பாடுகள் ஆகியவை இத்தகைய சில நடவடிக்கைகளில் அடங்கும். இலங்கையும் இளஞ்சிறார்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் குழந்தைகள் தொடர்பான சமூக ஊடக நடைமுறைகளில் அதிகப் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் ஒரு சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்த இலக்கு வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.