கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தாம் கருதுவதாகவும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
தமக்கு வேண்டியவர்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தும் நடைமுறையை நீக்கவேண்டும் என்ற கருத்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னொருவையில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கின்றது. அச்சட்டத்தை தராதரம் பார்த்து அமுல்படுத்த முடியாது எனவும் சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமையவே நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட வேண்டாம் என மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனத் தாமும் நீண்டகாலமாக கலந்துரையாடி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் மக்களுக்குத் தமது கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமை உள்ளது என்றார்.
மேலும் இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், மனுக்களைச் சமர்ப்பிக்கவும் கலந்துரையாடல்களை நடத்தவும் முடியும் எனக் குறிப்பிட்ட அவர், இறுதிச் செயற்பாடாக மக்களின் அனைத்துக் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டே நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்றும், மக்கள் அபிப்பிராயத்தைப் புறக்கணித்து அரசு எதனையும் செய்யாது என்றும் உறுதியளித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்ததே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காகவேதான், அதனை நிச்சயம் செய்வோம் என வலியுறுத்தினார்.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் முகநூல் வாயிலாகத் தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு அரசு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.டி. லால் காந்த மேலும் தெரிவித்தார்.