திருவள்ளூர்:
எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அவதூறு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மழை பாதிப்பு, அரசியல் மேடைகளில் அவதூறு பேச்சுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
கல்லூரி நிகழ்ச்சி:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் அருண்குமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சுவடே இல்லாமல் மறைந்த மழைநீர்:
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே இரவில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால், அடுத்த நாள் காலையிலேயே தேங்கி நின்ற சுவடே இல்லாமல் மழைநீர் காணாமல் போனது. நமது முதலமைச்சர் விஜய் மிகச் சிறப்பாகப் பணியாற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொண்டார். அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் மக்களுக்குத் தொல்லை ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொண்டனர். இதனை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரே முன்னுதாரணம்:
யாரையும் அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசக்கூடாது. அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இழிவாகப் பேசக்கூடாது. அப்படி அவதூறாகப் பேசுவது சரிதானா என்பதை அவரவர் வீட்டில் உள்ள பெற்றோரிடமும், பெண்களிடமும் கேட்டுப் பாருங்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களைப் பற்றி அவதூறு பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக முதலமைச்சர் விஜய்யையே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவர் எவ்வளவு கண்ணியமிக்கவராகச் சட்டப்பேரவையில் நடந்துகொண்டார் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் முன்னாள் முதலமைச்சரைக் கருணாநிதி என்று கூறியதற்காக, உடனடியாக மன்னிப்புக் கேட்டவர்தான் நமது முதலமைச்சர் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
#JCDPrabhakar #Speaker #TNAssembly #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive