கனடாவின் ஒட்டாவாவில் நேற்று இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி குறித்த மாநாட்டில் செம்மணி அநீதிக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பேர் இங்கு திரண்டுள்ளமை நம்பிக்கையளிக்கின்றது என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் என்பது – செம்மணி எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானது,குறுகிய அறிவிப்பில் இவ்வளவு பேர் இங்கு திரண்டுள்ளமை எனக்கு நம்பிக்கையளிக்கின்றது.
கடந்த வருடம் நான் உரையாற்றியவேளை 240 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,இம்முறை அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது, 543 ஆகியிருக்கலாம் என கருதுகின்றேன்.
அந்த மனித எச்சங்களில் குழந்தைகள் சிறுவர்கள் பெண்களின் மனித எச்சங்களும் காணப்படுகின்றன.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஆதாரங்களாக மீட்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை சிறுவர்களின் புத்தகபைகள் பால்போத்தல்கள் இளம்பெண்களின் வளையல்கள் போன்றவை.
இவை வெறும் பொருட்கள் மாத்திரமல்ல ஒவ்வொன்றும் ஒருவரால் நேசிக்கப்பட்டவருடயவை
செப்டம்பர் மாதம் மனித உரிமை ஆணைக்குழு இந்த மனித புதைகுழிகள் சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புபட்டவையாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
எனினும் மனித எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை.
1990களின் ஆரம்பம் முதல் இறுதியுத்தம் வரை காணாமல் போனவர்களின் உறவினர்கள் விடைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அவர்கள் பல தசாப்தங்களாக காத்திருக்கின்றனர்.தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிவதற்கு உரிமையுள்ளவர்கள்.