சென்னை:
பெரம்பூர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளைச் சென்னை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடிய விடிய மழை:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் தொகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பெரம்பூர் சுரங்கப்பாதையில் ஆய்வு:
சென்னை மேயர் பிரியா, முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பெரம்பூர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திமுகவைச் சேர்ந்த சென்னை மேயர் பிரியா, முதலமைச்சர் விஜய்யின் சொந்தத் தொகுதியில் நேரில் ஆய்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு:
முன்னதாக, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் பாலம், ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதிகளிலும் மேயர் பிரியா ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், மழைக்காலக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேயர் பிரியாவின் இந்த ஆய்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
#MayorPriya #Perambur #ChennaiRain #CMVijay #ChennaiCorporation #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive