சென்னை:
புகார் அளித்த 10 நிமிடத்தில் பிரச்சினையைச் சரி செய்து விடுவோம் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தி.நகரில் தேங்கிய மழைநீர்:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ஸ்கூட்டரில் அமைச்சர் ஆய்வு:
தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் ஸ்கூட்டரில் வலம் வந்த அமைச்சர் ஆனந்த், தேங்கியுள்ள வெள்ள நீரையும், நிவாரணப் பணிகளையும் நேரில் பார்வையிட்டார். தண்ணீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அங்கிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஸ்கூட்டரில் சென்று அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்தது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
30 மோட்டார்கள்:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆனந்த், முதலமைச்சரின் உத்தரவின்படி 30 மோட்டார்கள் வைத்திருக்கிறோம். முந்தைய ஆண்டுகளில் மழைநீர் 4 முதல் 5 நாட்கள் வரை சாலையில் தேங்கி நிற்கும். தற்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நீர் அகற்றும் பணியைச் செய்து வருகிறோம். அனைத்து இடங்களிலும் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். புகார் அளித்த 10 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்குச் சென்று பிரச்சினையைச் சரி செய்து விடுவார்கள் என்று தெரிவித்தார். மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்துப் பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சரின் உறுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.
#MinisterAnand #ChennaiRain #TNagar #RainWater #TVKGovt #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive