கடந்த மூன்று தசாப்தங்களாக உருவெடுத்து வந்த ஒரு யதார்த்தத்தை எதிர்கொள்வதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம். அது மிகவும் அவசரமானது மிகவும் கனதியானது.
இது செம்மணி மனித புதைகுழிகள் மற்றும் இலங்கையில் தொடரும் கட்டமைக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுவித்தல் குறித்த யதார்த்தம். நீதிக்கான அடிப்படை அழுத்தங்களை கனடா எவ்வாறு முன்னெடுக்கலாம் என்ற அடிப்படை கேள்வி தொடர்பானது.
ஈழதமிழ் சமூகத்திற்கு வெளியே உள்ள பலருக்கு செம்மணி ஒரு தொலைதூர பகுதியாக தோன்றலாம்.ஆனால் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் மில்லியன் கணக்கான தமிழர்களுக்கும்,கனடாவை தங்கள் தாயகம் என அழைக்கும் தமிழர்களுக்கும் செம்மணி என்பது உலக வரைபடத்தில் ஒரு இடம்மாத்திரமல்ல அதற்கும் அப்பாற்றபட்டது.
செம்மணி இனப்படுகொலையின் அடையாளம், தீர்வு காணப்படாத அரசவன்முறையின் ஒரு காட்சி. இலங்கை இன்று வரை தொடர்ந்து அனுபவிக்கும் தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை மீதான ஒரு குற்றப்பத்திரிகை.
மனித புதைகுழிகள் என்பது போரின் தற்செயலான எச்சங்கள் அல்ல, மாறாக அவை அரசின் நோக்கங்களின் வெளிப்பாடு.
அவை மனித உயிர்களை கொலை செய்து உண்மைகளை மண்ணிற்குள் புதைப்பதற்கான செயற்பாடுகள்.நாங்கள் இது குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இங்கே கூடியிருக்கின்றோம்.
ஏன் செம்மணி இன்று முக்கியமாக உள்ளது என்பதை புரிந்துகொள்வதற்கு நாங்கள் 30 வருடங்களுக்கு முந்தைய கதையை திரும்பி பார்க்கவேண்டும், எவ்வாறு மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை மீண்டும் நினைத்து பார்க்கவேண்டும்.
1995இல் இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை தமிழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்றினார்கள்,அவர்கள் பல இராணுவமுகாம்கள் சோதனை சாவடிகள் போன்றவற்றை அமைத்து உலகில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாற்றினார்கள்.
பிராந்தியத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்பட்ட சோதனைசாவடிகளின் நோக்கம் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகயிருந்தாலும் அன்றைய யதார்த்தம் என்பதும் என்ன நடந்தது என்பதும் தமிழ் மக்களின் ஆன்மாவை இன்னமும் காயப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
யாழ்குடாநாட்டின் கடும் மோதல் முடிவிற்கு வந்த பின்னர் குடாநாட்டிற்கு திரும்பி வந்தவர்களில் ஒருவர் 18 வயது கிருஸாந்தி குமாரசுவாமி – அவரின் படம் இங்கே உள்ளது.
அவர் பரீட்சை எழுதிவிட்டு தனது நண்பியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார், நண்பி இராணுவவாகனம் மோதியதால் உயிரிழந்தவர்,கிருஷாந்த குமாரசுவாமி செம்மணி காவலரண் ஊடாக செல்லும்போது அதிலிருந்த படையினர் அவரை தடுத்து நிறுத்தினார்கள்,அவரை படையினர் விசாரணைக்கு உட்படுத்துவதை அயலவர் ஒருவர் பார்த்தார். கிருஷாந்தி குமாரசுவாமியை உயிருடன் பார்த்த இறுதி தருணம் அதுதான்.
மகளை காணோம் என கவலையடைந்திருந்த கிருஷாந்தியின் அம்மாவிடம் அயலவர் தான் பார்த்ததை தெரிவித்தார் , தாயார் தனது 16 வயது மகன் பிரணவனுடன் செம்மணி காவலரண் அமைந்திருந்த பகுதிக்கு சென்றார்,அயலவரும் சென்றார், அதன் பின்னர் அவர்களை யாரும் உயிருடன் பார்க்கவில்லை.
அந்த வருடம் 1996 – யாழ்ப்பாணத்தில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போனார்கள், சர்வதேச மன்னிப்புச்சபை ஒரு நாள் மாத்திரம் 39 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்கள்,அதன் பின்னர் எவரும் உயிருடன் திரும்பவில்லை என தெரிவிக்கின்றது.
அந்த வருடம் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 700க்கும் அதிகமானவர்கள் காணாமல்போனார்கள் – யாழ்ப்பாணம் என நாங்கள் குறிப்பிடும் பகுதியின் அளவை கருத்தில்கொள்ளும்போது இது மிகப்பெரிய எண்ணிக்கை.
ஏனைய நூற்றுக்கணக்கான சம்பவங்களை போல இல்லாமல்
எப்படியோ கிருஷாந்திக்கு நேர்ந்த அவலம் அந்த பயங்கரமான பிரதேசத்தினை உடைத்துக்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
தெற்கில் மகளிர் உரிமை அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன, மனித உரிமை அமைப்புகளும் குரல்கொடுத்தன, முன்னர் ஒருபோதும் இல்லாத விதத்தில் செயற்பட்ட அரசாங்கம் சில படையினரை கைதுசெய்தது.
கைதுசெய்யப்பட்டவர்கள் செம்மணியில் கிருஸாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிற்கு அப்பால் விசாரணையாளர்களை கொண்டு சென்றனர் அங்கு அவர்கள் மனித புதைகுழிக்குள் உடல்களை கண்டுபிடித்தனர்.இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது கிருஸாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவந்தது.
ஒரு இராணுவீரர் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த விபரங்களை வெளியிட்டார், நீதிமன்றத்தில் அவர் பலர் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்டு செம்மணியிலும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் புதைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அவர் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த தளபதிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டார்.
எட்டு படையினருக்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
ஆனால் இந்த தண்டனையை இலங்கை நீதியை வழங்கதீர்மானித்துள்ளது என்பதற்கான அடையாளமாக கருதக்கூடாது .