சென்னை:
அண்மையில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குப் புதிய திட்டங்களை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மதுராந்தகம் தொகுதி:
அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே சுமார் ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். செம்பூண்டி ஏரியின் மதகுகள் சுமார் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும். தலா ரூ.30 லட்சத்தில் 6 நெல் கொள்முதல் நிலையங்களும், ஆத்தூரில் சுமார் ரூ.20 கோடியில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், சுமார் ரூ.10 கோடியில் 25 ஏக்கரில் மாநில விதைப் பண்ணையும் அமைக்கப்படும். அச்சரப்பாக்கத்தில் சுமார் ரூ.20 கோடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். பாலாற்றின் குறுக்கே படாளம் – உதயம்பாக்கம் இடையே உயர்மட்டத் தடுப்பணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுராந்தகம் ஏரியில் பூங்கா, பணிபுரியும் பெண்களுக்கான விடுதி, சுமார் ரூ.3 கோடியில் அறிவுசார் மையம், சுமார் ரூ.4 கோடியில் வாரச்சந்தை அமைக்கப்படும். 1984-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுமார் 30 கி.மீ. நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாய், 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் தூர்வாரப்படும். புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். கருங்குழியில் சுமார் ரூ.80 லட்சத்தில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் சுமார் ரூ.3 கோடியில் 25 MVA மின்மாற்றி நிறுவப்படும். கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாராபுரம் தொகுதி:
திருப்பூர் மாவட்டத்தில் மீதமுள்ள 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்குக் காவிரி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,439 கோடியில் செயல்படுத்தப்படும். வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். சின்னபுத்தூர் கிராமத்தில் 20 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 271 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்படும். சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். மூலனூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். தாராபுரம் நகராட்சியில் சுமார் ரூ.6 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#CMVijay #Madhurantakam #Tharapuram #NewProjects #TVKGovt #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive