தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா நேற்று காலமானார். 400க்கும் மேலான திரைப் படங்களுக்கு பெருமைக்குரியவர் இசையமைப்பாளர் தேவா.
சென்னை மயிலாப்பூரில் கடந்த 1950-ஆம் ஆண்டு பிறந்த தேவாவின் இயற்பெயா் சொக்கலிங்கம் தேவநேசன். சிறு வயதிலிருந்தே இசையில் ஆா்வம் கொண்டிருந்த அவா், தன்ராஜ் மாஸ்டரின் மேற்கத்திய இசை கற்று, லண்டன் டிரினிட்டி கல்லூரியில் இசைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா். சென்னையில் பரவலாக பாடப்பட்ட கானா பாடல்களை, வெகுசன மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைப்படங்களின் வழியே கொண்டு சோ்த்த பெருமை தேவாவையே சேரும்.
திரைத் துறைக்கு வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான பக்தியிசை பாடல்களுக்கு இசை அமைத்திருந்த தேவா, 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானாா்.
இதைத் தொடா்ந்து 1989-இல் ராமராஜன் நடித்த ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்துக்கு தேவா இசை அமைத்தாா். 1990-இல் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம்தான் தேவாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், அவருக்கான திருப்புமுனை திரைப்படமாகவும் அமைந்தது.
நடிகா் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, அருணாசலம், பாட்ஷா ஆகிய 3 வெற்றி திரைப்படங்களுக்கு தேவா இசை அமைத்தாா். இதில், அண்ணாமலை மற்றும் பாட்ஷா படங்களின் பின்னணி இசை அனைவராலும் கொண்டாடப்பட்டவை.
ரஜினிகாந்தின் திரைப்படங்களில் அவரது பெயருக்ககாக பிரத்யேக இசையை உருவாக்கினாா் தேவா. இன்றளவும் அந்த இசை, உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகா்களால் கொண்டாடப்படுகிறது.
அதேபோல், 1990-களில் புதுமுக நாயகா்களாக அறிமுகமாகி இருந்த தற்போதைய முதல்வா் விஜய், அஜீத், பிரசாந்த் உள்ளிட்ட பலரது திரைப்படங்களுக்கு இசையமைத்து, அவா்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவா் தேவா. முதல்வா் விஜய்யின் நேருக்கு நோ், நினைத்தேன் வந்தாய், தேவா, விஷ்ணு, ரசிகன், குஷி, பகவதி, பிரியமுடன் உள்ளிட்ட படங்களுக்கும், அஜீத்தின் காதல்கோட்டை, நேசம், ஆனந்த பூங்காற்றே, வாலி உள்ளிட்ட படங்களுக்கும் தேவாவின் இசை மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன.
மெல்லிசை மன்னா் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவாவுக்கு ‘தேனிசை தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினாா். வைகாசி பொறந்தாச்சு, ஆசை, குஷி உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளா் விருதையும், அமிா்த வா்ஷினி என்ற கன்னட திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்போ் விருதையும் பெற்றாா். 1992-ஆம் ஆண்டு தமிழக அரசால், கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.
1990களில் தமிழ் சினிமாவில் ஒருபுறம் இளையராஜா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மானின் வருகை தமிழ் திரைப்பட இசையின் ஒலித் தரத்தையே மாற்றியிருந்தது. அந்தச் சூழலில்தான் தேவாவும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.
இதை 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் இதை குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தேவாவின் இசையில் இருந்த முக்கியமான தன்மை, ஒரே வகை இசைக்குள் அவர் தன்னை சுருக்கிக் கொள்ளாததுதான்.
திரைப்படங்களில் கானா பாடல்களை பரவலாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவுக்கு முக்கியமான இடம் உண்டு.
ஆனால் கானா தனது ஆரம்பகால இசை அடையாளம் அல்ல என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். இசையமைக்கத் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கானா பாடல்களை உருவாக்கியதாகவும், அவைதான் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் தன்னை மிக வேகமாகக் கொண்டு சென்றதாகவும் 2023ஆம் ஆண்டு பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் தேவா கூறினார்.
தனது மெலடி பாடல்களுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பை அவர் முக்கியமாகக் கருதினார்.
“கானா ஒரு கண் என்றால் மெலடி ஒரு கண்” என்பதே தேவா தனது இசையைப் பற்றி பல முறை வெளிப்படுத்திய பார்வை.
தமிழ் திரையிசையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், மணிரத்னத்தின் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு வழக்கமான பாணியில் இசையமைக்காமல் வேறு மாதிரி அணுக வேண்டும் என்று தான் முடிவு செய்ததாக தேவா கூறியுள்ளார்.
அந்த மாற்றத்தின் விளைவாக ஆசை, நேருக்கு நேர், அப்பு, குஷி போன்ற படங்களின் இசை அவர் இசையமைத்த முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டதாக அமைந்தது. பல மெலடி பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றபோதும், அவற்றிற்கு தான் இசையமைத்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாமல் போனது தமக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
அதற்கு அவர் கூறிய பின்வரும் சம்பவமே உதாரணம். தனது லைவ் கான்செர்ட்டில் பாடவிருந்த பாடல்களின் பட்டியலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் அனுப்பியபோது, “உங்கள் பாடல்களை மட்டும் பாடினால் போதும்; மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை வேண்டாம்” என்று அவரிடம் கூறியுள்ளனர்.
அந்தப் பட்டியலில் இருந்த எல்லா பாடல்களும் தனது பாடல்கள்தான் என்று தேவா விளக்கியபோதும், நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற “புல்வெளி புல்வெளி” பாடலை அவர்தான் இசையமைத்தாரா என்றே அவர்கள் கேட்டுள்ளனர்.
ஒரு பாடல் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன் இசையமைப்பாளர் யார் என்பதே தெரியாமல் போனது தனக்கு வருத்தத்தைத் தந்ததாக தேவா கூறியிருந்தார்.
இதனை எதிரொலிக்கும் வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். பேருந்தில் தேவா இசையமைத்த பாடல் ஒலிக்கும் போது முதியவர் ஒருவர் “ராஜா ராஜாதான்” என்று கூற, இளைஞர் ஒருவர் அது தேவாவின் பாடல் என்று கூறும் காட்சி இடம்பெற்றிருந்தது.
தேவாவின் பாடல்கள் வெற்றிபெற இசையுடன் பாடல் வரிகளுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாக அவர் கருதினார். தனது ஆரம்பக்கால படங்களில் காளிதாஸ் என்பவர் சுமார் 50 படங்களுக்கு பாடல்கள் எழுதியதாக தேவா நினைவுகூர்ந்திருக்கிறார்.
பின்னர் வாலி, வைரமுத்து, பிறைசூடன், காமகோடியான், நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய் உள்ளிட்ட பல தலைமுறை பாடலாசிரியர்களுடன் அவர் பணியாற்றினார்.
தாமரையையும் நா. முத்துக்குமாரையும் தான் அறிமுகப்படுத்தியதாக தேவா குறிப்பிட்டிருந்தார். பல தலைமுறை பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய இந்த அனுபவமும், காலத்திற்கு ஏற்ப அவரது இசை மாறிக்கொண்டே இருக்க உதவியது.
ஒரு காலத்தில் திரையரங்குகள், கேசட்டுகள் மற்றும் வானொலியில் ஒலித்த தேவாவின் பாடல்கள், இன்று திரைப்பட மறுபயன்பாடுகள், சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் பிரமாண்ட மேடை நிகழ்ச்சிகள் வழியாக புதிய தலைமுறையைச் சென்றடைந்து கொண்டேயிருக்கின்றன.