இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் மேலும்; தெரிவித்துள்ளதாவது
பௌத்தத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கும் ஏற்பாடுகளை இன்னமும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை,உரிய சட்டங்களை விதிமுறைகளை நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கவேண்டும்.
பௌத்தத்திற்கும் நாட்டின் ஏனைய மதங்களுக்கும் சமூகங்களுக்கும் உரிய மதிப்பை வழங்கும் அதேவேளை பௌத்தமதகுருமாரின் காவியுடைக்கு உரிய மரியாதையை வழங்கவேண்டும்.
வாரத்திற்கு இரண்டு தடவைகள் குழுக்களை நியமிக்காமல்,24 மணிநேரத்திற்குள் உரிய தகவல்களை சேகரித்து பௌத்த மதகுருமாரின் காவியுடையின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும் மத தலைவர்களின் ஆடைகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையீடுகளை தவிர்ப்பதற்கும் விதிமுறைகளில் மாற்றங்களை அறிவிக்கவேண்டும்.
பௌத்தமதகுருவின் காவியுடையை அகற்றியமை மிகவும் கண்டித்தக்க ஒரு செயல் சாதாரண மக்களுக்கு பௌத்தமதகுருவின் காவியுடையை பலவந்தமாக அகற்றுவதற்கான உரிமையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.