சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிலையம் குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக சந்திப்பொன்றை வழங்குமாறு இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தினர் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைக் கடிதத்தைக் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த சங்கத்தின் பிரதிநிதிகள், அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:
1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தினால் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலாலயா இசை மற்றும் நடனப் பள்ளி மூலம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக சமூக நலனையும், சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசார மேம்பாட்டையும் இலக்காகக்கொண்டு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள எமது வளாகத்தில் பிரத்யேக வகுப்பறைகள், ஒளிப்பதிவு நிலையங்கள் மற்றும் கேட்போர்கூடம் என்பவற்றை உள்ளடக்கிய நவீனமயமாக்கப்பட்ட கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான முழுமையான நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு கொள்கையளவில் உடன்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய வளமாக அமையக்கூடிய இந்தக் கலாசார நிலையத்தை நிறுவும் செயன்முறைக்கான தலைமை வழிகாட்டியாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு முன்நிற்கும் என நாம் கருதுகின்றோம்.
எனவே இந்த உத்தேச கலாசார நிலையத்தின் கட்டட அமைப்பு, நிதியுதவி எதிர்பார்க்கைகள் உள்ளிட்ட விபரங்கள் பற்றி உங்களிடம் தெளிவுபடுத்துவதற்கு ஏதுவாக ஒரு சந்திப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எமது குழுவில் விஜிதா தம்பிநாயகம், யாழினி குக், வதனி வேல்பிள்ளை, சாந்தி பாலசுப்ரமணியம் மற்றும் குமார் நடேசன் ஆகியோர் அடங்குவர் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.