நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை திருத்திக் கொண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் செயற்படுகிறது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வை பழிவாங்குவதற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை கைது செய்துள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்தவின் குடும்பத்தாரை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை. அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அஞ்ச போவதில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிங்கள இனத்துக்கும், பௌத்த மதத்துக்கும் எதிராகவே செயற்படுகிறது. ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கள பௌத்த மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். பௌத்தத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அது பாரதூரமான விளைவுகளை இந்த நாட்டில் ஏற்படுத்தும் என்றார்.