மதுரை:
மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாமாக முன்வந்த நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அப்பணியில் ஈடுபட அக்கட்சியினருக்கு அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு:
தொண்டி பகுதிக்கு உட்பட்ட மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைச் சுத்தம் செய்யக் கோரி தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் தூய்மைப் பணியில் ஈடுபடத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பாராட்டு:
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்ட நிலையில், “அரசியல் கட்சி தாமாக முன்வந்து நற்பணியில் ஈடுபடுவதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். சீமானின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. தூய்மைப்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்,” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசியல் பேசக் கூடாது:
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், இதில் சீமான் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றார். அதற்கு நீதிபதிகள், “இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும். தூய்மைப் பணியின் போது அரசியல் சம்பந்தமாக எதுவும் பேச வேண்டாம்,” என அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.
#Seeman #NTK #MaduraiHighCourt #Manimutharu #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive