முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட, சிரிலிய சவிய எனும் அமைப்பு தொடர்பில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில், இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றின் ஊடாக அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியன் நிதியைப் பெற்றமை மற்றும் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியமை, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் (FCID) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, ஒக்டோபர் 05 ஆம் திகதி இரவு மலேசியாவிலிருந்து MH 179 விமானம் மூலம் இலங்கை திரும்பினார்.
இந்நிலையில், ‘சிரிலிய சவிய’ வழக்கு விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி, ஒக்டோபர் 05 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகளாலும் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.



அது குறித்து எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி விளக்கமளிக்குமாறு FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதேவேளை, சிரிலிய நிதி மோசடி தொட்பில் வாக்குமூலம் வழங்க, ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) நேற்று முன்தினம் (05) ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலைமையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.