மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப் பாக, இந்த மாதத் தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் மட்டும் 10 இற்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது வீடுகளிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் எரிவாயு சிலிண்டர்களும் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, கோவில் உண்டியல்களிலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பட்டப்பகலிலேயே சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால், தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புத் தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயல்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் செல்லும்போது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.