சிறீலங்கா அரசினால் தனியார் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றப்பட வேண்டும், காணி உரிமையாளர்களிடம்—மக்களின் காணி மக்களுக்கே என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்கின்ற காணி உரிமையாளர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கக்கூடிய எங்கள் அனைவருக்கும் எதிராக, பல வழக்குகளை எந்தவித சட்ட நியாயமும் இல்லாத வகையிலே, எந்தவித நீதி அடிப்படையுமில்லாத வகையிலே சிறீலங்கா அரசு எங்கள் மீது போட்டிருக்கிறது.
அந்த பல வழக்குகளிலே இன்றைய தினம் ஐந்து வழக்குகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தாலே எடுத்துக்கொள்ளப்பட்டு, வழமை போல மீண்டும் தவணை ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு போடப்பட்டிருக்கிறது.
இந்த செயற்பாடானது, சிறீலங்கா அரசு எந்தவித காரணங்களையும் அல்லது நியாயங்களையும் முன்வைக்காமல், இந்த வழக்குகளை தொடர்ச்சியாக தவணை போட்டு போட்டு போட்டு போட்டு சலித்தெடுத்து எங்களை நீதிமன்றங்களுக்கு அலைக்கழித்து, அந்த ஒரு அலைக்கழிப்பின் காரணமாக நாங்கள் இதிலிருந்து விடுபடுவோம் என்று நினைக்கிறது.
ஆனால், எங்கள் மக்களுக்கான உரிமைகளுக்கான போராட்டம், எங்கள் இன விடுதலைக்கான போராட்டம் எத்தனை சட்டவிரோதமான, நீதிக்கு புறம்பான சிறீலங்கா அரசினுடைய செயற்பாடுகள் நடைபெற்றாலும், தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை இத்தால் தெரியப்படுத்தியிருக்கின்றோம்