காலையில் நாம் எழுந்தவுடன் பார்க்கும் மொபைல் போன், கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்வாட்ச் முதல் காருக்குள் இருக்கும் எலெக்டிரானிக்ஸ் சாதனங்கள் வரை, எதுவாக இருந்தாலும் அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய உலகளாவிய தொழில்துறை வலைப்பின்னல் இருக்கிறது. உலகில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகள் எவை?
சமீபத்திய தரவுகளின்படி, சீனா, உலகின் டிஜிட்டல் ஹார்டுவேர் உற்பத்தித் திறனில் 58.8 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதாவது, உலகின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி வரைபடத்தில் சீனா மிகப்பெரிய மையமாகத் திகழ்கிறது. அடுத்த இடங்களில் தைவான் 10.2%, தென் கொரியா 6.7%, ஜப்பான் 4.8%, இந்தியா 3.8% ஆகியவை உள்ளன.
1.சீனா – உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை
உலக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம் அபரிமிதமானது. ஸ்மார்ட்போன், கணினி, தொலைக்காட்சி,பிரின்டட் சர்கியூட் போர்டு, எலெக்டிரானிக்ஸ் உதிரி பாகங்கள் என பல்வேறு துறைகளிலும் சீனா மிகப்பெரிய உற்பத்தி தளமாக உள்ளது.
2. தைவான்
பரப்பளவில் சிறிய தைவான், உலகின் மிக முக்கியமான செமிகண்டக்டர் மையங்களில் ஒன்று. குறிப்பாக உயர் நவீன சிப்ஸ் தயாரிப்பில் அதன் பங்கு மிகப்பெரியது. இதனால் ஒரு மொபைல் போன் அல்லது கணினி எந்த நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டிருந்தாலும், அதற்குள் இருக்கும் முக்கிய சிப் வேறு ஒரு நாட்டில் குறிப்பாக தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
3. தென் கொரியா
தென் கொரியா எலெக்டிரானிக்ஸ் உலகில் மற்றொரு மிகப்பெரிய சக்தி. சாம்சங் போன்ற நிறுவனங்களின் மூலம் ஸ்மார்ட் போன்கள், டெலிவிஷன் செட்கள், டிஸ்பிளே போர்டுகள், மெமரி சிப்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. 2024-ல் தென் கொரியாவின் எலெக்டிரானிக்ஸ் உற்பத்தி சுமார் 162 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது.
4. ஜப்பான்
ஒருகாலத்தில் சோனி, பானசானிக், டொஷிபா போன்ற நுகர்வோர் எலெக்டிரானிக்ஸ் நிறுவனங்களால் உலக சந்தையை ஆக்கிரமித்திருந்த ஜப்பான், இன்று தனது கவனத்தை பல உயர்தர எலெக்டிரானிக்ஸ் காம்பொனென்டுகள், சென்சார்கள், செமிகண்டக்டர்கள் துறைகளில் செலுத்துகிறது.
5. இந்தியா
இந்தியா எலெக்டிரானிக்ஸ் துறையில் இப்போது மிகவும் கவனிக்கத்தக்க நாடாக மாறியுள்ளது. 2024–25 தரவுகளின்படி டிஜிட்டல் ஹார்டுவேர் உற்பதியில் இந்தியா 3.8% பங்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
6. வியட்நாம் – மொபைல் போன்களின் புதிய மையம்
குறைந்த உற்பத்திச் செலவு, ஏற்றுமதிக்கு ஏற்ற சூழல் மற்றும் பெரிய சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் காரணமாக வியட்னாம் இந்தத் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
அமெரிக்கா எங்கே?
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் தாயகமாக இருந்தாலும், மொத்த எலெக்டிரானிக்ஸ் துறை உற்பத்தித் திறன் என்று பார்த்தால், அதன் பங்கு சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைவிட குறைவாக உள்ளது. 2024–25 டிஜிட்டல் ஹார்டுவேர் உற்பதி தரவரிசையில் அமெரிக்கா 2.9% பங்குடன் ஏழாவது இடத்தில் உள்ளது.