நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலை அகக்கப்பட்ட சம்பவத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அதிகாலை 6:30 மணியளவில், சிறீலங்கா காவல்துறையினரால் இச்சிலை அத்துமீறி அகற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டி, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் மற்றும் அடிப்படை கூட்டுரிமைகளை மறுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பேரினவாத அடக்குமுறையின் தொடர்ச்சியே என மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், ஒடுக்கப்படும் மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயற்பாடுகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது வெண்கலச் சிலையை சிறீலங்கா காவல்துறையினர், 27/09/2026 அன்று காலை 6:30 மணியளவில், அத்துமீறி அகற்றி எடுத்துச் சென்றுள்ள செயலிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக நமது கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம். இச்செயல், தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமைகளின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இது தொடர்ந்து ஆளும் சிறீலங்கா அரசுகளின் புரையோடிப் போயுள்ள சிங்கள பௌத்த பேரினவாத மனோ நிலையின் மாறாத வடிவமொன்றாகும்.
தமிழர் தாயக விடுதலைக்காக அறப்போர் செய்து தன்னுயிர் ஈந்த தியாகதீபம் திலீபன் அவர்களை அமைதி வழியில் நினைவுகூருவது என்பது தமிழர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைத் தொடர்ச்சியாகப் பறிப்பதும், நினைவுச் சின்னங்களை அகற்றுவதும், சிறீலங்கா அரச பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகத் தனது அடக்குமுறையைக் காட்டி நிற்பதற்கு ஒரு தெளிவான ஆதாரமாக விளங்குகின்றது.
தமிழர்களின் தாயகமெங்கும் கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கும் நோக்கோடு பெருமளவிலான ‘போர் வெற்றிச் சின்னங்கள்’ நிறுவப்பட்டுள்ளன. பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக அவை இன்றும் தமிழர் தேசத்தில் திணிக்கப்பட்டு சிறீலங்கா இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக தமிழ் மக்களைத் துன்புறுத்தும் வகையாக சிறீலங்கா அரசின் வெற்றிச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, அறப்போர் செய்து தன்னுயிர் ஈந்த ஒருவரை தமிழ் மக்கள் கண்ணீரோடு நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச் சிலையை அங்கிருந்து அகற்றிச் செல்வது எத்தகைய நீதி?
இவ்வாறு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி, அவர்களின் மனங்களைத் துன்புறுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு மனநிலையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, தமிழ் மக்கள் மீதான பேரினவாத சக்திகளின் தொடர்ச்சியான இனவாதப் போக்கிற்கு, அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்து வருகின்றது என்பதையே இந்தச் செயற்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஒடுக்கப்படும் மக்களின் மனங்களை மேலும் ரணப்படுத்தும் இத்தகைய சீண்டல்கள், நல்லிணக்க மாயைக்குப் பின்னிருந்து மெல்ல வெளித்தெரியும் சிங்கள – பௌத்த பேரினவாத மனோநிலையையன்றி வேறில்லை
