கொழும்பு — மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக விளங்கி வரும் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, கட்சியின் மறுசீரமைப்பு, ‘அரகலய’ போராட்டத்தின் தாக்கம், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வெற்றி மற்றும் இரு ஆண்டு கால ஆட்சிப் பயணம் குறித்து வழங்கிய முழுமையான நேர்காணலின் தமிழாக்கம்:
கேள்வி: 1995 ஆம் ஆண்டு நீங்கள் JVP இன் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றீர்கள். இப்போது 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி, இந்த நீண்ட அரசியல் பயணத்தைப் பற்றி ரில்வின் சில்வா என்ன நினைக்கிறார்?
பதில்: அந்த 31 ஆண்டுகளும், எதிரிகளால் சீரழிக்கப்பட்ட நமது அரசியல் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பவே நாங்கள் உழைத்தோம். வழியில் பல தடைகளுடன் கூடிய கடினமான பயணமாகவே இது இருந்தது. தேர்தல்களில் வென்றோம், தோற்றோம்; கட்சிக்குள் பிளவுகளும் ஏற்பட்டன. இந்த அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டோம், சுயபரிசீலனை செய்தோம், தேவையான மாற்றங்களை மேற்கொண்டோம்.
இறுதியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2024 செப்டம்பர் 21 அன்று, ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றோம். நாங்கள் கடந்து வந்த பாதையையும், சந்தித்த சவால்களையும் திரும்பிப் பார்க்கும்போது, மனதிற்குள் ஒரு பணிவான மகிழ்ச்சியும் ஆத்மதிருப்தியும் ஏற்படுகிறது.
கேள்வி: JVP வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர் நீங்கள் தான். இவ்வளவு காலம் ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி வழிநடத்தினீர்கள்?
பதில்: கட்சியை மீண்டும் கட்டியெழுப்பிய காலம் அதன் வரலாற்றில் ஒரு தனித்துவமான அத்தியாயம். தோழர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை நாம் இழந்திருந்த நேரம்; தோழர் சோமவன்ச அமரசிங்க மட்டுமே எஞ்சியிருந்தார், அவரும் வெளிநாட்டில் வசித்து வந்தார். அந்தச் சூழலில், சிதறிக்கிடந்த அனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து கட்சியை உருவாக்க நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம்.
நாங்கள் பதவிகளைக் குறிவைத்துச் செயல்படவில்லை. கட்சியின் கூட்டு முடிவுகளின்படி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினோம். அந்தச் செயல்பாட்டில் இந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சியில் உள்ள அனைவரின் தோழமை, ஆதரவு மற்றும் அன்பின் காரணமாகவே இவ்வளவு காலம் என்னால் இந்த பதவியில் நீடிக்க முடிந்தது.
அரசியல் சூழல்கள் மாறியபோது, நாங்களும் உத்திகளை மாற்றினோம். JVP ஐ மையமாகக் கொண்டு ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப உழைத்தோம். 1994 இலும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டோம்; ஆனால் அது குறுகிய காலமே நீடித்தது.
சில விஷயங்கள் நடப்பதற்கு அரசியல் சூழ்நிலைகள் கனிந்து வர வேண்டும்; அவை வெறும் நமது விருப்பத்திற்கு ஏற்ப மட்டும் நடந்துவிடாது. இம்முறை அரசியல் காரணிகள் சரியாகப் பொருந்தி வந்தன. பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்தன, இதன் மூலம் NPP ஐ ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவாக்க முடிந்தது. இதன் காரணமாகவே மக்கள் இறுதியில் ஆட்சி அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைத்ததாக நம்புகிறோம்.
அதே நேரத்தில், பழைய ஆட்சி முறையும் சீர்குலைந்தது. மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்தனர், ஆனால் அவர் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். எஞ்சியிருந்த ஒரே மாற்று நாங்கள்தான். ஆனால் மக்கள் திடீரென எங்கள் பக்கம் திரும்பிவிடவில்லை. 2019 இல் எமது வாக்கு வங்கி 3 சதவீதமாகக் குறைந்திருந்தது. அங்கிருந்துதான் அடிமட்ட அளவில் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பினோம். உள்ளூர், தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் திட்டமிட்டுச் செயல்பட்டு, ஒன்றிணையக்கூடிய அனைத்துச் சக்திகளையும் இணைத்தோம்.
தோழர் அனுர குமார திசாநாயக்கவின் தலைமையும் இதில் முக்கியப் பங்காற்றியது. அவர் பல திறமைகள் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க தலைவர். இந்த அனைத்துக் காரணிகளின் சேர்க்கையே எமது வெற்றிக்கு வழிவகுத்தது.
கேள்வி: 2022 ‘அரகலய’ போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்ற NPP க்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் அதை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள் என்று சிலர் கூறுகிறார்களே. உண்மையில் அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததா?
பதில்: அரகலய போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கக்கூடிய சூழ்நிலை எதுவும் அங்கிருக்கவில்லை. அரகலய ஒரு ஆட்சியாளரை விரட்டுவதில் வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் மக்களை முறைப்படி ஒன்றிணைத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வேறு சூழல் உருவாகியிருக்கலாம். ஆனால் அரகலயவுக்குள் இருந்த சில தீவிரவாதப் பிரிவினர் அவ்வாறு சிந்திக்கவில்லை.
தன் விளைவாக, ‘பொஹொட்டுவ’ கட்சியால் ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் மீண்டும் அணிதிரள முடிந்தது. ஆனால், அரகலய மக்களை விழிப்படையச் செய்தது; அடக்குமுறையாலும் குடும்ப ஆட்சியாலும் எந்தவொரு ஆட்சியாளரும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்பதை நிரூபித்தது. அதனால்தான் அத்தகைய அமைப்பை மீண்டும் உருவாக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பின்னணியில், மக்களுக்குக் கிடைத்த ஒரே அரசியல் மாற்றாக நாங்கள் உருவெடுத்தோம். ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தக்கவைத்துக்கொண்டு ஒரு தெளிவான இலக்கை நோக்கி நகர்வதற்கும் வலுவான அமைப்பு தேவை. அந்த அமைப்பிற்குத் தெளிவான பார்வை இருக்க வேண்டும், அதைச் சுற்றி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
மக்கள் ஒன்றிணைவது என்றால் வெறும் வாக்களிப்பது மட்டுமல்ல; அதற்குப் பிறகும் அந்தப் பயணத்தில் உறுதுணையாக நிற்பதும், பங்களிப்பதுமே ஆகும். இன்றுவரை, எங்களுக்கு வாக்களித்த பெருவாரியான மக்கள் எங்களைப் பாதுகாக்கவும் எங்களோடு பணியாற்றவும் விரும்புகிறார்கள். நாங்கள் சிறிய தவறு செய்தாலும், “தோழரே, இங்கு ஒரு பிரச்சினை உள்ளது; தலையிட்டுத் தீருங்கள்” என்று முதலில் கூறுவது அவர்கள்தான். இத்தகைய அனுபவத்தை நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை. மக்களின் அந்த பலத்தைக் கொண்டு, வளமான ஒரு நாட்டையும் சிறந்த வாழ்க்கையையும் உருவாக்க முடியும்.
கேள்வி: NPP ஐக் கட்டியெழுப்புவதில், குறிப்பாக JVP இன் பழைய உறுப்பினர்களையும் புதிய தலைமுறையினரையும் ஒன்றிணைப்பதிலும், புதியவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதிலும் என்னென்ன சவால்கள் இருந்தன?
பதில்: எங்களைப் பற்றி நாங்களே பெருமையாகப் பேசிக்கொள்ளும் கலாச்சாரம் எங்களிடம் இல்லை. ஆனால், நாங்கள் அடைந்த சாதனையைப் புரிந்துகொள்ள 1965 ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். தோழர் விஜேவீரவும் ஏனைய தலைவர்களும் பழைய இடதுசாரிகளிடமிருந்து வேறுபட்ட ஒரு தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை இய இயக்கத்திற்குள் உருவாக்கினர்.
சுயநலமற்ற அரசியல் ஈடுபாடு, சுயலாபமின்றிப் பொது இலக்கிற்காக உழைத்தல் மற்றும் சகோதரத்துவப் பிணைப்பைப் பேணுதல் ஆகியவையே இதன் அடித்தளம். அந்த கலாச்சாரம் எங்களுக்குப் பெரும் பலமாக அமைந்தது.
1994 நவம்பரில் நான் சிறையிலிருந்து விடுதலையானபோது, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாலும் சிதறிக்கிடந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அவர்கள் என் பின்னால் ஒன்றிணைந்தார்கள். வெற்றிகளிலும் தோல்விகளிலும் அந்தப் பிணைப்பு இன்றளவும் தொடர்கிறது.
எங்களிடம் அரசியல் புரிதலும் ஒழுக்கமும் உள்ளது; ஆனால் அவை ஒருபோதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டவை அல்ல. அது எங்களை நாங்களே நிர்வகிக்கவும், கருத்து வேறுபாடுகளைக் கையாளவும் உதவுகிறது. கடினமான காலங்களில் அரசியலில் உறுதியாக இருப்பதும், கூட்டாக முடிவெடுப்பதும்தான் மிகவும் கடினமான விஷயம். நாங்கள் ஒருபோதும் தனித்து முடிவுகளை எடுத்ததில்லை; ஜனநாயகத்தைப் பேணி கூட்டாகவே பணியாற்றி வருகிறோம்.
கேள்வி: நாட்டின் தலைவரைச் சந்திப்பதற்கு முன்பே, ராஜதந்திரிகள் பலரும் JVP இன் பொதுச்செயலாளரான உங்களைச் சந்திப்பது குறித்துச் சிலர் கவலை வெளியிடுகிறார்களே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 1994க்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் அதிகரித்தபோது, சில தூதரகங்கள் எம்மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கின. அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராகும் இயக்கமாக நாங்கள் வளர்ந்தபோது அது மேலும் அதிகரித்தது.
எங்கள் வெற்றிக்கு முன்பே, தூதரக அதிகாரிகள் தோழர் அனுரவை கட்சியின் தலைவராகவும், என்னை பொதுச்செயலாளராகவும் சந்தித்து வந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும், அரசாங்கத்தின் முதன்மைக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் அவர்கள் என்னைச் சந்திப்பதைத் தொடர்கிறார்கள்.
எங்களிடம் ஒரு தனித்துவமான அமைப்பும் உள்ளது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல், ஆளுமட்சியின் பொதுச்செயலாளர் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் வகிப்பதில்லை.
நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாரானபோது, தோழர் அனுரவுக்கும் எனக்கும் இடையே வெவ்வேறு கருத்தியல் நிலைப்ாடுகள் இருப்பதாக எதிர்த்தரப்பினர் சித்தரிக்க முயன்றனர். ஆரம்பத்தில், தூதரக அதிகாரிகளும் இதில் உண்மை உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினர்.
இன்று அவர்களுக்குத் தெளிவான புரிதல் உள்ளது. இடதுசாரித்துவம் எமது இயக்கத்தின் ஒரு பகுதி என்பதையும், நாங்கள் ஜனநாயகத்தை உயர்த்திய பிடித்து, ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒன்றாக உழைக்கிறோம் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
கேள்வி: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக JVP க்குள் ஒரு குழு செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை என்ன?
பதில்: அது முற்றிலும் ஒரு அபத்தமான கதை. சொல்லப்போனால், எதிர்க்கட்சியினர் இதுபோன்ற கதைகளில் மூழ்கியிருப்பது நமக்கே சாதகமானது. எந்த ஆதாரமும் இல்லாத, யாரும் நம்பாத ஒரு குற்றச்சாட்ட பிடித்துத் தொங்குவது அவர்களுக்கு எந்த நன்மையும் தராது.
இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தாலும் இதே நிலைதான் நீடிக்கும். இனி எங்களை JVP என்றும் NPP என்றும் பிரிக்க முடியாது. இரண்டிற்கும் இடையே கோடு போட்டுப் பிரிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
தோழர் ஹரிணிக்கும் எங்களுக்கும் இடையே பலமான நட்பும் பிணைப்பும் உள்ளது. எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் தோழர் அனுர மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்களோ, அதே அன்பை தோழர் ஹரிணி மீதும் வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் NPP ஐத் தங்களது கட்சிகளைப் போல் இயங்குவதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் எங்களால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. நாங்கள் அப்படி அமைக்கப்பட்டவர்கள் அல்ல. எதிர்க்கட்சியினர் இதுபோன்ற கேவலமான பொய்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று மட்டுமே கூற முடியும்.
கேள்வி: JVP இல் இன்னமும் முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்களா?
பதில்: ஆம், கணிசமான எண்ணிக்கையிலானோர் உள்ளனர்.
கேள்வி: இப்போது அதிகாரத்தில் இருக்கும்போது அது ஏன் தேவைப்படுகிறது?
பதில்: அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பதவி பாதுகாப்பாக இருக்கும். அதற்கு JVP மற்றும் NPP பலமாக இருக்க வேண்டும், அரசாங்கத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
அதற்கு முழுநேர அரசியல் செயல்பாட்டாளர்கள் தேவை. தோழர் வி. ஐ. லெனின் இவர்களை “தொழில்முறை புரட்சியாளர்கள்” (Professional Revolutionaries) என்று குறிப்பிட்டார். இத்தகைய குழு இருப்பது இந்தச் செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது.
நாங்கள் எப்போதும் போல எங்களது அரசியல் கல்வியைத் தொடர்கிறோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். “தள்ளாடுபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்” என்று லெனின் ஒருமுறை கூறினார். அந்தப் புரிதல் நமக்கு இருக்கும்போதுதான், மற்றவர்களுக்கும் அதை உருவாக்க உதவ முடியும்.
ஒரு அழகான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்கு உள்ளது. ஆனால் அது வெறும் கனவு மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமான கனவு. அதை அடைவதற்கு கடின உழைப்பு தேவை.
கேள்வி: JVP இன் பொதுச்செயலாளராகவும், ஒரு சாதாரண குடிமகனாகவும் NPP அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: இந்த நாடு மாற வேண்டும் என்று விரும்பும் ஒரு மனிதனாக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், “நாங்கள் வென்றுவிட்டோம், எனவே எல்லாமே சிறப்பாகிவிட்டது” என்று சொல்வதற்கில்லை; பொறுப்பு இப்போது இன்னும் அதிகமானது.
நாங்கள் கட்சியைப் பலப்படுத்த வேண்டும், அரசாங்கத்தை முன்னோக்கிச் செல்ல வேண்டும், நாட்டைப் புனரமைக்க வேண்டும். முன்பு நாங்கள் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடிந்தது. இப்போது முடியாது, ஏனென்றால் இது ஒரு நாடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் எங்களைப் பாதிக்கின்றன. ‘டிட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) வந்தது. மத்திய கிழக்குப் போர் எங்களைப் பாதித்துள்ளது. எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும், இந்தச் சூழலிலும் எங்களால் மக்கள் மீது சுமையை ஏற்றிவிட முடியாது.
அத்துடன், IMF ஒப்பந்தம், இனவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் மற்றும் சதிச் செயல்களையும் நாங்கள் கையாள வேண்டியுள்ளது. ஒரு அழகான நாட்டை உருவாக்கும் எங்களது நீண்டகால இலக்கை நோக்கி நகரும் அதே வேளையில், இந்தச் சவால்கள் அனைத்தையும் நாங்கள் சமாளிக்க வேண்டும்.
மக்கள் எங்களுக்குப் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர். அதை நாங்கள் காட்டிக்கொடுக்க மாட்டோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்போம். சிரமங்களும் தாமதங்களும் இருக்கும். நீங்கள் பெருமளவிலான பணிகளை மேற்கொள்ளும்போது குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம்.
நாங்கள் அனைவரும் பிஸியாக இருக்கிறோம், ஆனால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நாங்கள் உருவாக்கிய அரசியல் கலாச்சாரத்திற்குள் நின்று இதைச் செய்கிறோம். ஒருவேளை எதிர்க்கட்சி அதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லையோ அல்லது அவர்களால் முடியவில்லையோ தெரியவில்லை.