சென்னை
தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, அவரது சகோதரர் குடும்பத்தினர் தொடர்ந்த தாக்குதல் வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சகோதரர் வீட்டில் தாக்குதல்:
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
சமரச முயற்சி தோல்வி:
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமரசத் தீர்வு மையத்தை அணுக அறிவுறுத்தியது. இதன்படி 4 முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், புகார்தாரரான கெரோலின் தரப்பில் சமரசத்திற்கு விருப்பமில்லை என நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி லட்சுமி நாராயணன் அதிரடி:
புகார்தாரர் விரும்பாத நிலையில் சமரசத் தீர்வு மையத்தில் தீர்வு காணும்படி நிர்பந்திக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, சமரசப் பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சர் மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற ஆஜரிலிருந்து விலக்கு:
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டி புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
#MinisterMariyaWilson #TVKGovernment #MadrasHighCourt #PuducherryPolice #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates