கனடாவின் பொருளாதாரத்திற்குச் சிறு தொழில்களே முதுகெலும்பாக விளங்குவதோடு, புதுமைகளை ஊக்குவிக்கவும், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களை வலுப்படுத்தவும் வழிவகுக்கின்றன. இதன்காரணமாகவே, கூட்டாட்சி அரசின் கொள்முதல் (federal procurement) வாய்ப்புகளைச் சிறு தொழில்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசாங்க மறுசீரமைப்பு, பொதுப் பணிகள் மற்றும் கொள்முதல் அமைச்சரும் கியூபெக் பிரதிநிதியுமான கௌரவ ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound), மற்றும் தொழில்துறை அமைச்சரும் கியூபெக் பிராந்தியங்களுக்கான கனடிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சருமான கௌரவ மெலனி ஜோலி (Mélanie Joly) ஆகியோரின் சார்பில், பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சரும், மாநிலச் செயலாளருமான (சிறு தொழில்கள் மற்றும் சுற்றுலா) கௌரவ ரிச்சி வால்டெஸ் (Rechie Valdez) புதிய சிறு தொழில் கொள்முதல் திட்டத்தின் (SBPP) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கட்ட நடவடிக்கைகளை இன்று சுட்டிக்காட்டினார்.
இந் நடவடிக்கைகள் கூட்டாட்சி ஒப்பந்தங்களுக்கான தடைகளைக் குறைப்பதையும், கனடிய சிறு தொழில்களுக்கான வாய்ப்புகளை விரிவாக்குவதையும் நோக்கமாக்க கொண்டுள்ளன. அமைச்சர் வால்டெஸுடன் வாட்டர்லூ நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பர்டிஷ் சாகர் (Bardish Chagger) மற்றும் கிச்சனர்-கெனிஸ்டோகா நாடாளுமன்ற உறுப்பினர் டிம் லூயிஸ் (Tim Louis) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கைகள் கொள்முதல் நடைமுறைகளை எளிமையாக்குவதோடு, கனடிய சிறு தொழில்கள் கூட்டாட்சி ஒப்பந்தங்களை எளிதில் புரிந்துகொள்ளவும், அரசாங்க வாய்ப்புகளை விரிவாக அணுகவும் உதவும். மேலும், கனடாவின் ‘இன்னோவேஷன், சயின்ஸ் அண்ட் எகனாமிக் டெவலப்மென்ட்’ அமைப்பின் புதுமையான தீர்வுகள் திட்டத்தின் (Innovative Solutions Canada) மூலம், கூட்டாட்சி கொள்முதல் வாய்ப்புகள் உட்பட, கனடிய சிறு தொழில்கள் தங்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, சோதிக்க மற்றும் காட்சிப்படுத்த 5 ஆண்டுகளில் $79.9 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், அதிகமான கனடிய நிறுவனங்கள் கூட்டாட்சி ஒப்பந்தங்களுக்குப் போட்டியிடவும், தங்களது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். அதே நேரத்தில், மத்திய அரசின் கொள்முதல் அதிகாரத்தை கனடிய நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் வழிவகுக்கும்.
மேற்கோள்கள்:
“கனடாவின் பொருளாதாரத்தில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கனடிய சிறு தொழில் கொள்முதல் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள முதல் கட்ட நடவடிக்கைகள் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். நாங்கள் கொள்முதல் முறையை எளிமையாக்குகிறோம், தடைகளைக் குறைக்கிறோம், வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறோம்; இதன் மூலம் அதிகமான கனடிய நிறுவனங்கள் கூட்டாட்சி ஒப்பந்தங்களுக்குப் போட்டியிட்டு அவற்றை நிறைவேற்ற முடியும். இது அரசாங்கத்தின் கொள்முதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கனடாவின் வளர்ச்சியையும் கனடியர்களின் வேலைவாய்ப்புகளையும் தீவிரமாக ஆதரிப்பதாகும்.”
– கௌரவ ஜோயல் லைட்பவுண்ட், அரசாங்க மறுசீரமைப்பு, பொதுப் பணிகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் மற்றும் கியூபெக் பிரதிநிதி
“கனடாவின் சிறு தொழில்கள் தினமும் நமது சமூகங்களையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தி வருகின்றன. கூட்டாட்சி கொள்முதல் மூலம் உருவாக்கப்படும் வாய்ப்புகளிலிருந்து அதிகமான சிறு தொழில்கள் பலனடையும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிறு தொழில் கொள்முதல் திட்டமானது கனடிய தொழில்முனைவோர் கூட்டாட்சி கொள்முதல் நடைமுறைகளைக் கையாளவும், அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறவும் உதவும். இது ஒரு வலுவான, உறுதியான கனடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும்போது வணிகங்கள் வளர்வதற்கும் வெற்றிபெறுவதற்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும்.”.